ஆன்மிகம்
ரத வீதிகளில் வலம் வந்த சுவாமி-அம்பாள் தேர்களை படத்தில் காணலாம்.

ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்கள்

Published On 2021-03-13 05:33 GMT   |   Update On 2021-03-13 05:33 GMT
மாசி மகாசிவராத்திரி திருவிழாவையொட்டி, ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர்கள் வலம் வந்தன. இன்று அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

சுவாமி-அம்பாள் தேர்களை வடம் பிடித்து கோவில் இணைஆணையர் (பொறுப்பு) தனபால், தக்கார் ராஜா குமரன் சேதுபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னே செல்ல தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீற்றிருந்த பெரிய தேர்கள் இழுக்கப்பட்டன.

4 ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்கள் பகல் 11.15 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தடைந்தன.

மாலை 5 மணி அளவில் சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து திட்டக்குடி பகுதியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் 10-வது நாளான இன்று (சனிக்கிழமை) மாசி மாத அமாவாசையையொட்டி பகல் 1 மணிக்கு கோவிலில் இருந்து சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Tags:    

Similar News