செய்திகள்
மழை

ஜூலை மாதத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் அதிக மழை

Published On 2021-07-22 05:30 GMT   |   Update On 2021-07-22 07:47 GMT
தென்மேற்கு பருவமழை குறையும் போது சென்னை உள்பட பல இடங்களில் மழை பெய்வது இயல்பு. அதுபோலவே தற்போது மழை பெய்து இருக்கிறது.
சென்னை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்கிறது. மாலை, இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக சென்னையில் பதிவாகும் மழை அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் 220.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

13 ஆண்டுகளுக்கு முன்பு 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் 243.9 மி.மீ.மழை பதிவாகி இருந்தது. இந்த ஆண்டு
தென்மேற்கு பருவமழை
தொடங்கிய ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 20-ந் தேதி வரை 275.2 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. மீனம்பாக்கத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 20-ந் தேதி வரை 207.4 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

ஜூலை மாதத்தில் 121.3 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் சேர்ந்து இந்த வருடம் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 21-ந் தேதி வரை 216.3 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. வழக்கமாக 144 மி.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது.



ஜூலை மாதம் அதிகமாக பெய்து வருவது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை குறையும் போது சென்னை உள்பட பல இடங்களில் மழை பெய்வது இயல்பு. அதுபோலவே தற்போது மழை பெய்து இருக்கிறது. ஈரப்பதத்துடன் கூடிய தென்கிழக்கு காற்று வீசியதால் இந்த மழை கிடைத்து இருக்கிறது. வரும் நாட்களில் மழை அளவு குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் வானிலையாளர் பிரதீப்ஜான் கூறும்போது, ‘‘கடந்த 17 மற்றும் 18-ந் தேதிகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 136.6 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இது 200 ஆண்டுகளுக்கு முன்பு 1813-ம் ஆண்டில் பெய்த மழை பொழிவாகும்.

அடுத்த சில நாட்கள் வறண்ட வானிலை காணப்படும். 25-ந் தேதி மாலை மீண்டும் சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றார். 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சென்னையில் ஜூலை மாதம் அதிக மழை பெய்துள்ளது. இன்னும் மழைக்கு வாய்ப்புள்ளதால் 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் பெய்த மழை அளவை விட இந்த வருடம் ஜூலை மாதம் சென்னையில் அதிக மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

Tags:    

Similar News