செய்திகள்
108 ஆம்புலன்ஸ்

முத்தூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்- நோயாளிகள் பாதிப்பு

Published On 2021-04-30 23:06 GMT   |   Update On 2021-04-30 23:06 GMT
முத்தூரில் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை கடந்த 1 வாரமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
முத்தூர்:

முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதன்படி இந்த விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுபவர்கள், படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்பதற்கும், அவசரகால நோயாளிகள் மற்றும் பிரசவத்திற்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர்களின் பயன்பாட்டிற்கும் முத்தூரில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இதன்படி கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது வரை இந்த 108 ஆம்புலன்ஸ் இப்பகுதிகளில் பல்வேறு சேவைகளை வழங்கி காங்கேயம், ஈரோடு, திருப்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு பல்வேறு தரப்பு நோயாளிகளை கொண்டு சேர்த்து வந்தது.

இவ்வாறு இரவு பகலாக இயங்கி பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்த 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 1 வாரமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தற்போது விபத்து ஏற்பட்டால் காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்படும் நேரத்தில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் உயிர்கள் சில சமயம் காப்பாற்றப்பட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதிகளில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கத்தினால் கடந்த 2 வார காலமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது இங்கு 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளும் சிகிச்சைக்காக சென்று வருவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்

ஆனால் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடும் விபத்து மற்றும் அவசர கால சேவையை வழங்குவதற்கு மீண்டும் முத்தூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும் என்று கடைக்காரர்கள், வர்த்தகர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், நகர, கிராம பொதுமக்கள், நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News