செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் நாளை முதல் மதுக்கடை திறக்க அனுமதி

Published On 2021-06-16 01:00 GMT   |   Update On 2021-06-16 01:00 GMT
கேரளாவில் நாளை முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. மதுக்கடைகள் திறக்கவும், தமிழக எல்லை வரை பஸ் இயக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஊரடங்கில் தளர்வு செய்வது குறித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-



கேரளாவில் ஏப்ரல் மாதம் இறுதியில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நாளை (வியாழக்கிழமை) முதல் கூடுதல் தளர்வுகளுடன் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் மீண்டும் அறிவிக்கப்படும் வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

மற்ற நாட்களில் மதுக்கடைகள், பார்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, அவரவருக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் மதுக்கடைகளுக்கு சென்று மது வாங்கி கொள்ளலாம்.

கொரோனா பரிசோதனை பாதிப்பு விகிதத்தின் அடிப்படையில் தளர்வுகள் நடைமுறை படுத்தப்படும்.

நீண்ட தூர பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களும் இயக்கப்படும். மற்ற மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து குறித்து முடிவு செய்யப்பட வில்லை. குமரி-கேரள எல்லையான களியக்காவிளை, இஞ்சிவிளை வரை கேரள அரசு பஸ்கள் இயக்கப்படும்.

அனைத்து அத்தியாவசிய கடைகளும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து பொது தேர்வுகளும் நடத்தப்படும். திருமணம், மரண நிகழ்ச்சிகளில் பங்கேற்க 20 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. நாளை முதல் அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் அனைத்து நாட்களிலும் இயங்கலாம். தலைமை செயலகத்தில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம். வங்கிகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் செயல்படலாம்.

ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் அனுமதிக்கப்படுகிறது. வணிக மால்கள் திறக்க அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News