லைஃப்ஸ்டைல்
வெற்றிதரும் புதிய அணுகுமுறைகள்...

வெற்றிதரும் புதிய அணுகுமுறைகள்...

Published On 2019-08-19 03:25 GMT   |   Update On 2019-08-19 03:25 GMT
எல்லா நிறுவனங்களும் வேகமாக மாறிவரும் சூழலில் சில புதிய தலைமைத்துவ நுணுக்கங்களை தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது.
ஒரு சிறந்தத் தலைமைகொண்ட நிறுவனம் எல்லா நிலையிலும் புகழ்பெற்று விளங்குகின்றது. ஆனால், தலைமை நிர்வாகத்தில் சிறந்த கவனம் செலுத்தாத நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை அடிக்கடி இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன.

இதனால்தான், சிறந்தத் தலைமையை அமைக்க எல்லா நிறுவனங்களும் நாள்தோறும் திட்டங்கள் தீட்டுகின்றன. மாறுகின்ற சூழலுக்கு ஏற்ப தங்கள் தலைமையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நிர்வாகத்திலும் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்கின்றன. மேலும், மாற்றங்களை சரியாகப் புரிந்துகொள்ள பணியாளர்களுக்கு பக்குவமாக பல பயிற்சிகளை வழங்குகின்றன. இதன்மூலம், அந்த நிறுவனங்கள் மிகச்சிறந்த செயல்திறனோடு (Performance) திகழ்கின்றன.

எல்லா நிறுவனங்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், சில முக்கிய “புதிய தலைமைத்துவ நுணுக்கங்களை” (New Leadership Techniques) நடைமுறைப்படுத்திய அமைப்புகள் மட்டுமே மாறிவரும் சூழலில் (Changing Environment) தங்கள் வளர்ச்சியை நிரந்தரமாக்கி, முன்னேற்றப் பாதையில் வெற்றி நடைப்போடுகின்றன.

எல்லா நிறுவனங்களும் வேகமாக மாறிவரும் சூழலில் சில புதிய தலைமைத்துவ நுணுக்கங்களை தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. அவற்றுள் சில -

தடைகளைத் தவிர்ப்போம்


ஒரு சிறந்தத் தலைவரை உருவாக்க உதவும் சில முக்கிய தலைமைத்துவ நுணுக்கங்களை ஆய்வுகள் மூலம் மேலாண்மை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

‘வெர்னே ஹர்னிஷ்’ (Verne Harnish) என்னும் மேலாண்மை அறிஞர் எழுதிய “ஸ்கேலிங் அப்” (Scaling Up) என்னும் நூல் “தலைமைத்துவம்” பற்றிய சில உண்மைகளை தெளிவாக்குகின்றது.

நிறுவனங்கள் முக்கியமான 4 முடிவுகளில் மிக அதிகக் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் (People), வியூகம் (Strategy), செயல்படுத்துதல் (Execution), பணம் (Cash) ஆகியன பற்றிய சிறந்த முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

“ஒரு நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் சிறந்த ஊக்கம்கொண்ட பணியாளர்கள் நிறைந்த நிறுவனத்தில், தலைவர்கள் பணியாளர்களின் ‘ஊக்கப்படுத்துதல்’ (Motivation) பற்றி அதிக கவனம் செலுத்தமாட்டார்கள். ஆனால், அந்தப் பணியாளர்களின் ஊக்கத்தை குறைக்கும் விதத்தில் (Demotivating) செயல்படும் சூழலைத் தவிர்ப்பார்கள். நல்ல குழுவின் பணித்திறனை தடுக்கும் இடையூறுகளை கண்டறிந்து, அவற்றிலிருந்து தங்கள் பணியாளர்களைக் காத்துக்கொள்வதற்கான செயல்களில் ஈடுபடுவார்கள். இதுவே சிறந்தத் தலைமைக்கு அழகு” என்கிறார் வெர்னே ஹர்னிஷ்.

துடிப்பான, உற்சாகம்கொண்ட பணியாளர்களுக்கு தலைவரின் “ஊக்கப்படுத்துதல்” (Motivation) தேவையில்லை. ஏனென்றால், அந்தப் பணியாளர்கள் எப்போதும் உற்சாகத்தோடு தொடர்ந்து பணியாற்றுவார்கள். ஆனால், அதேவேளையில் ஊக்கமில்லாத குழுவில் (Demotivated Team) சிறந்தத் தலைவரை பணி நியமனம் செய்யும்போது, தலைவரின் செயல்திறனும், சக்தியும் வீணாகிவிடுகிறது. மேலும், அந்தத் தலைவர்கள் விரக்தியோடு (Frustration) காணப்படுவார்கள்.

ஊக்கமற்ற பணியாளர்களை (Demotivator) நிறுவனத்தைவிட்டு அகற்றுவது பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வழிமுறையாகும். நிறுவனத்தில் சிறந்த புத்தாக்க சூழலை (Creative Environment) உருவாக்குவதும் ஊக்கப்படுத்துதலின் அடிப்படையாகும்.

தவிர்க்க வேண்டிய தவறுகள்

நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்கும் விதத்தில் தலைவர்கள் பல்வேறு தகவல்களை பணியாளர்களுக்கு வழங்குகின்ற சூழல்கள் நாள்தோறும் உருவாகும். நிறுவன வளர்ச்சிக்கு உதவும் தகவல்களைத்தர அவர்கள் முயற்சி செய்யும்போது, அதற்குத் தடைபோடும் விதத்தில் தலைவர்கள் செயல்படுவது நல்லதல்ல.

“உங்கள் கருத்து சரியானது அல்ல”.

“நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள்”.

“நான் உங்கள் கருத்தை ஏற்கவில்லை. முரண்படுகிறேன்”.

“நீங்கள் சொல்வது தவறு. நான் சொல்வதுதான் சரி”.

“எல்லா விவரமும் எனக்குத் தெரியும். உன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இரு”.

- என முகத்தில் அடித்தாற்போல நேரடியாகவே பதில் தரும் தலைவர்கள் பல நிறுவனங்களில் இருக்கிறார்கள்.

இப்படி தலைவர்களின் வாயிலிருந்து சில வார்த்தைகள், அடிக்கடி எதிர்மறை கருத்துக்களாக வெளிப்படும். அந்த வார்த்தைகளில் பல பணியாளர்களை காயப்படுத்தும். சில வார்த்தைகள், அவமானத்தை அவர்களுக்குள் விதைத்துவிடும்.

சில தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள், ‘ஆனால்’, ‘இல்லை’, ‘இருந்தபோதும்’ என ‘மார்ஷல் கோல்ட்ஸ்மித்’ (Marshall Goldsmith) குறிப்பிடுகிறார்.

இந்த 3 வார்த்தைகளும் அடிக்கடி பயன்படுத்தப்படும்போது, தலைவர்களை சிலவேளைகளில் இக்கட்டான சூழலில் சிக்க வைத்துவிடும். இதனால், நிர்வாக வளர்ச்சிக்கு உதவும் நல்ல கருத்துக்களை நிர்வாகத்திற்கு வழங்க பணியாளர்கள் முன்வருவதில்லை.

“இவர்... யார் சொன்னாலும் காது கொடுத்து கேட்கமாட்டார். இவரிடம் நான் ஏன் பேச வேண்டும்?” என எண்ணி, வாய்ப்பூட்டுப்போட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். நிறுவனத்திற்கு, பணியாளர்களிடமிருந்து தரமான ‘பின்னூட்டம்’ (Feedback) கிடைக்காத நிலையும் உருவாகிவிடும். எனவே, இந்தத் தவறுகளை தலைவர்கள் தவிர்ப்பது நல்லது.

பாராட்டப் பழகுவோம்

1898-ம் ஆண்டுமுதல் “விளைவுகள் விதி” (Law of Effects) என்னும் மேலாண்மைக் கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது.

“பணியாளர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிறுவனத்தில் நிகழ வேண்டும். தண்டனைதரும் நிகழ்வுகள் மிகக் குறைவாகவே இருக்க வேண்டும்” என்பது அந்த விதியின் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

சிறப்பான பணியாளர்களைப் பாராட்டுவதும், அவர்களுக்கு பரிசுகள் வழங்குவதும் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். ஒரு மாதம் கடந்தபின்னர் வழங்கப்படும் பாராட்டும், பரிசும் பணியாளர்களை பெரிய அளவில் ஊக்கப்படுத்துவதில்லை. நல்ல பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு மணி நேரம்கூட தாமதிக்காமல் வழங்கப்படும் பாராட்டுகளும், பரிசுகளும் அவர்கள் மனதில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.

தவறு செய்யும்போது பணியாளர்களின் குறைகளை கண்டிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், அதேவேளையில், அவர்களின் சிறப்பான நடவடிக்கையையும் பாராட்டலாம். பணியில் ஏற்படும் குறைபாடுகளுக்கான காரணத்தை அலசி ஆராய்ந்து, பணியாளர்களுக்கு உதவும் விதத்தில் தலைவர்கள் தங்கள் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

தகவல்களைத் தெளிவாக்குங்கள்

தங்களின் தகவல்களை பணியாளர்களிடம் தெளிவாகத் தெரிவிக்கத் தலைவர்கள் பழகிக்கொள்ள வேண்டும். தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை சுருக்கமாகவும், தெளிவாகவும், அழகாகவும் வடிவமைத்து, சரியான ஊடகங்கள்மூலம் (Media) அனுப்பவும் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு தலைவர் தனது தகவல் தொடர்புத்திறனை வளர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த முடிவுகளை மேற்கொள்ளலாம்.

‘எஸ்.எம்.எஸ்.’மூலம் (SMS) தெரிவிக்க வேண்டிய கருத்தை, விலாவாரியாக விவரித்து கடிதம் எழுதுவது நேரத்தை வீணடிக்கும் செயல் அல்லவா? அதேபோல், விளக்கமாக தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை மிகச்சுருக்கமாக தெரிவித்து, பணியாளர்கள் மனதில் குழப்பத்தை உருவாக்குவதும் வீணான செயல் ஆகும்.

எனவே, தேவைக்குஏற்ப தகவல்களை தெளிவான முறையில் பகிர்ந்தளிக்கப் பழகிக்கொள்வது நல்லது. ‘இ-மெயில்’ (Email), ‘வாட்ஸ்அப்’ (Whatsapp) போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விரைவாகவும், மற்றவர்கள் புரிந்துகொள்ளும் விதத்திலும் தகவல்களைக் கையாளுவது மிகவும் சிறந்தது.

திறமைகளைப் பயன்படுத்துங்கள்

பொதுவாக, ஒரு நிறுவனத்தில் தகுதியானவர்களையும், திறமையானவர்களையும் மட்டுமே பணிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களது ‘தொழில்நுட்பத் திறன்’ (Technical Skill) மற்றும் ‘தனித்திறன்கள்’ நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைவதற்காக தகுந்த பயிற்சியும் வழங்குகிறார்கள்.

எனவே, இந்தப் பணியாளர்களின் தனித்திறமைகளையும், பலங்களையும் (Strengths) கண்டறிந்து, அவர்களது திறன்கள் அடிப்படையில் உதவிகள் செய்வதற்கு தலைவர்கள் முன்வர வேண்டும். தலைவர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் எல்லா பணியாளர்களாலும் பணியாற்ற இயலாது. இதனால், ஒவ்வொரு பணியாளர்களின் தனித்திறமைகளுக்கு ஏற்றவாறு அவர்களை உற்சாகப்படுத்தி, அந்தத் திறமைகளை நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முயற்சி செய்வது நல்ல தலைவருக்கு அழகாகும்.

கால மாற்றத்தினால் நிறுவனங்களில் நிகழும் பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்றவகையில் தலைவர்கள் தங்கள் அணுகுமுறைகளை மாற்றப் பழகுவதன்மூலம் சிறந்த வெற்றிகளை நாளும் பெறலாம்.

Tags:    

Similar News