செய்திகள்
விபத்து

வெள்ளியணை அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 18 பக்தர்கள் காயம்

Published On 2021-03-05 20:22 GMT   |   Update On 2021-03-05 20:22 GMT
வெள்ளியணை அருகே சரக்கு வேன் சாலை ஓரத்தில் கவிழ்ந்த விபத்தில் 18 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளியணை:

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே லந்தக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளவும், அருள்வாக்கு கேட்கவும், அமாவாசை, பவுர்ணமி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கரூர் மாவட்டம் மட்டுமல்லாது, பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வர்.

அந்தவகையில் வெள்ளிக்கிழமையான நேற்று கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களில் பலர் வீடு திரும்புவதற்காக அங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக மினி சரக்கு வேன் ஒன்று சரக்குகள் இன்றி வந்துள்ளது. அந்த சரக்கு வேனை நிறுத்திய 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளியணை வரை வருவதாக கூறி அதில் ஏறிக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து வெள்ளியணை நோக்கி வந்த அந்த மினி சரக்கு வேன் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.

இதில் சரக்கு வேனில் பயணம் செய்த 18 பக்தர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினர். இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News