ஆன்மிகம்
பசு தானம் செய்வது எப்படி?

பசு தானம் செய்வது எப்படி?

Published On 2019-09-23 09:02 GMT   |   Update On 2019-09-23 09:02 GMT
தானங்களில் பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது.
தானங்களில் பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது. பசுக்களை அதைப் பராமரிக்கக்கூடிய சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே தானம் செய்ய வேண்டும். தனி நபர்களுக்கு பசுவை தானமாக கொடுக்க விருப்பம் இல்லாதவர்கள் ஆலயங்களுக்கு பசுவைக் கொடுக்கலாம்.

தானம் செய்ய வேண்டிய பசு கன்றுடன் கூடியதாக இருக்க வேண்டும். கூடுமானவரை முதல் கன்றாக இருந்தால் மிகவும் நல்லது. கொம்பும், கால், குளம்பு போன்றவை உடையாமலும், வியாதி இல்லாமலும் ஆரோக்கியமாக உள்ள பசுவையே தானம் செய்ய வேண்டும். பசுவை தானம் செய்பவர்கள் குளித்து, சூரியனை வணங்கி கிழக்கு முகமாக இருந்து தங்கள் கோரிக்கையை சொல்லி தானம் கொடுக்கலாம். அந்த பசு மாட்டிற்கு தேவையான ஒரு வருட உணவையும் சேர்த்தே தானம் செய்ய வேண்டும்.

ஆலயங்களில் பசு தானம் செய்தால் கட்டாயம் அந்தப் பசுவை பராமரிக்க தேவையான நிதியையும் சேர்த்துக் கொடுப்பதே நன்மை தரும். பெரும்பாலான ஆலயங்களுக்கு பசு தானம் தருபவர்கள் வயதான அல்லது பால் கறவை அல்லாத அல்லது கன்று இல்லாத பசுக்களை தானமாக கொடுத்து விடுகிறார்கள். அது தவறாகும். நல்ல கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவையே தானமாக கொடுக்க வேண்டும்.

பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பல ஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது. பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். அது மட்டுமின்றி அவர் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது.

பசு தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம் செய்து செய்யலாம். சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும், தனது வம்சம் சிறப்புற விளங்கவும் ஒருவர் பசு தானம் செய்யலாம். ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே பசு தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக செய்யப்படும் பசுதானம் உக்ராந்தி பசு தானம் என்று செய்வதுண்டு. வருடப்பிறப்பிலும், புண்ணிய காலங்களிலும் பசு தானம் செய்வது மிக விசேஷமானதாகும்.

சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் சதுர்த்தியன்று விரதமிருந்து, தேவாரம், திருவாசகம் ஓதி, சிவபுராணம் படிக்கக் கேட்டு, பசுவை தானம் செய்ய வேண்டும். சிவபெருமான் அருளால் தானம் செய்பவர் உயர்ந்த கதி அடைகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விதம் தானம் செய்பவர் கைலாசத்தில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பலனை அடைவார். ஒருவர் இறக்கும் தருவாயில் கோ தானம் செய்வதால் எம பயம் விலகும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News