ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் மலையில் மகாதீபம்: வெளியூர் பக்தர்களுக்கு தடை

Published On 2021-11-17 08:50 GMT   |   Update On 2021-11-17 08:50 GMT
திருப்பரங்குன்றத்தில் 2 நாட்கள் கோவில் வளாகம், திருமண மண்டபங்களில் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின்முக்கிய நிகழ்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) இரவு 7.45 மணி முதல் 8.15 மணி வரை கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலின் பிரதான நுழைவாயில் செல்லுவதற்கு அனுமதி இல்லை. இதேசமயம் கோவிலின் வலதுபுறம் உள்ள தீர்த்தக்குளம் வழியாக பக்தர்கள் சென்று கருவறையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பட்டாபிஷேக நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மாலை 4 மணி வரை பிரதான கோவிலின் நுழைவுவாயில் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திருக்குளம் சந்து வழியாக கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் வளாகத்தில் மாலை 6 மணியளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது

இந்தநிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மலைமீது செல்ல அனுமதி இல்லை. வெளியூர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் மற்றும் கோவில் கல்யாண மண்டபம் வளாகத்திலோ தங்குவதற்கு அனுமதி இல்லைஎன்றுகோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் 18-ந்தேதி பவுணர்மி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News