வழிபாடு
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்ற போது எடுத்தபடம்.

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் தீர்த்தவாரி

Published On 2021-12-13 04:56 GMT   |   Update On 2021-12-13 04:56 GMT
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. சூரிய புஷ்பகரணியில் நீராட அனுமதி மறுத்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவக்கிரகங்களில் ராகுபகவான் தனி சன்னதியில் நாககன்னி, நாகவள்ளி என இரு தேவியருடன் மங்களராகுவாக அருள்பாலித்து வருகிறார்.

சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த விழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று பஞ்சமூர்த்தி சாமிகள் தனி்த்தனியாக வெள்ளி ரிஷப வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு சூரிய புஷ்கரணி முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் ஒருசேர எழுந்தருளினர். அப்போது ஏராளமான பக்தர்கள் பஞ்சமூர்த்தி சாமிகளை ஒரே நேரத்தில் தரிசனம் செய்தனர்.

பின்னர் சூரியபுஷ்கரணி தீர்த்த குளத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது சூரிய புஷ்கரணியில் நான்கு புறமும் பக்தர்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் குளத்தில் பக்தர்களை புனித நீராட அனுமதி வழங்கினர். ஆனால் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட காத்திருந்தும் அவர்களை குளத்துக்குள் புனித நீராட அனுமதிக்கவில்லை. இதனால் கரைகளில் காத்திருந்த பக்தர்கள் பஞ்சமூர்த்தி சாமிகளை தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். முன்னதாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் நித்யா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News