உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தமிழகத்தில் ஊரடங்கு: புதுவையில் களையிழந்த காணும் பொங்கல் சுற்றுலாதலங்கள் வெறிச்சோடியது

Published On 2022-01-16 10:05 GMT   |   Update On 2022-01-16 10:05 GMT
புதுவையில் காணும் பொங்கல் களையிழந்தது. வழக்கமாக காலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம், ஊசுடு படகு குழாம், பாண்டி மெரினா உள்ளிட்ட பகுதிகளில் கூடுவார்கள்.

புதுச்சேரி:

புதுவையில் காணும் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும்.

புதுவை மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு காணும் பொங்கலன்று மக்கள் குடும்பம், குடும்பமாக படையெடுத்து வருவர்.

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை கிடைப்பதால் தென் மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு புதுவைக்கு வருவர்.

சமீபகாலமாக உருமாறிய கொரோனா ஒமைக்ரான் தொற்று பரவலால் புத்தாண்டுக்கு பிறகு புதுவை யில் சுற்றுலா பயணிகளின் வருகை வார இறுதி நாட்களில் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரமே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மாநில எல்லைகளில் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் தமிழகத்திலிருந்து வருவோர் எண்ணிக்கை குறைந்தது.

காணும் பொங்கலான இன்றும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தின் எல்லைகளான கோரிமேடு, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கனகசெட்டிகுளத்தில் தமிழக போலீசார் புதுவையிலிருந்து தமிழகத்துக்குள் செல்ல முயன்றவர்களை தடுப்பு அமைத்து தடுத்தனர்.

தமிழகத்திலிருந்து புதுவைக்கு வந்தவர்களையும் புதுவை போலீசார் தடுத்தனர். மருத்துவம், அத்தியாவசிய காரணங்களுக்கு ஆதாரங்களுடன் வந்தவர்கள், 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தமிழக எல்லைக்குள் நுழைந்தே புதுவைக்குள் வர முடியும் என்பதால் அவர்களும் வரவில்லை. ஏற்கனவே, வெள்ளிக்கிழமையே வந்த சுற்றுலா பயணிகள் நேற்று இரவே சொந்த மாநிலத்துக்கு திரும்பி விட்டனர்.

இதனால் புதுவையில் காணும் பொங்கல் களையிழந்தது. வழக்கமாக காலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம், ஊசுடு படகு குழாம், பாண்டி மெரினா உள்ளிட்ட பகுதிகளில் கூடுவார்கள்.

ஆனால் இன்று சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்திலிருந்து புதுவைக்கும், புதுவையிலிருந்து தமிழகத்துக்கும் பஸ்கள் இயக்கப் படாததால் பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் பிரதானசாலைகளை கைவிட்டு சில கிராமப்புற சாலைகள் வழியாக புதுவை எல்லைகளில் உள்ள மதுபான கடைகளுக்கு வந்து தமிழக பிரியர்கள் மது அருந்திச்சென்றனர்.

அதேநேரத்தில் புதுவை மக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்களை வழக்கம் போல் வீடு தேடி சென்று சந்தித்து பொங்கல் பரிசு பெற்றனர்.

மாலையில் கடற்கரை சாலை, பாண்டி மெரீனா, வீராம்பட்டினம் கடற்கரையில் புதுவை மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News