ஆன்மிகம்
வள்ளலார்

அருட்பெருஞ் ஜோதியான வள்ளலார்

Published On 2021-01-26 04:30 GMT   |   Update On 2021-01-25 09:23 GMT
‘என்னையும் இரக்க தன்னையும், ஒன்றாய் இருக்கவே இசைவிந்து என் உயிர் தான் உயிர் இரக்கந்தான் ஒன்றதே இரண்டிலை’ என்பன வள்ளலாரின் சத்திய வசனங்களாகும்.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி அருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராமையாபிள்ளை-சின்னமையார் ஆவார். அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகள்.

‘என்னையும் இரக்க தன்னையும், ஒன்றாய் இருக்கவே இசைவிந்து என் உயிர் தான் உயிர் இரக்கந்தான் ஒன்றதே இரண்டிலை’ என்பன வள்ளலாரின் சத்திய வசனங்களாகும்.

வள்ளலார் பிறந்த ஆறாவது மாதத்திலேயே தந்தையை இழந்தார். அதன்பின் தாய் சின்னமையார் வள்ளலார் மற்றும் அவருடன் பிறந்த 4 பேரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். வள்ளலார் தமது ஆசிரியராகிய காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி கற்றார். வள்ளலார் கவிபாடித் துதித்தலை கண்ட மகாவித்துவான் கற்பிப்பதை கைவிட்டார். பின்னர் வள்ளலார் கற்கவேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார். கேட்கவேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார்.

பள்ளி பருவத்தில் பள்ளி பயிலாததால், வள்ளலார் வீட்டில் தங்காமல் நாள்தோறும் கந்த கோட்டத்திற்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டார். வள்ளலார் இடையில் அணியும் ஆடையை முழங்கால் மறையும் அளவுக்கு அணிவார். மேலாடையை உடல் முழுவதும் போர்த்தி இருப்பார். தலை முழுவதும் முக்காடு அணிந்திருப்பார். வள்ளலார் எப்போதும் கைகட்டி கொண்டே இருப்பார்.

சில நாட்களில் தூய வெண்ணிற ஆடையை உடுத்தி வந்தார். வாடிய பயிரை கண்டு வாடினார். இளைத்த விலங்குகளை கண்டு இளைத்தார். மக்கள் முகங்களில் இளைப்பை கண்டபோது மயங்கினார். பிறர் கண்ணீர் வடிப்பதை பார்த்து தாமும் கண்ணீர் வடித்தார். அனைவரிடம் இரக்கம் காட்டுவது வள்ளலாரின் ஜீவகாருண்யம்.

கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியர். உயிர் பலி கூடாது. புலால் உண்ண கூடாது. ஏழைகளின் பசி தவிர்த்தல் ஆகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல், சாதி, சமயம் முதலிய எவ்வித வேறுபாடும் கூடாது. எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கைகொள்ள வேண்டும் என்பன வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கை ஆகும்.

‘உருவமாகியும், அருவமாகியும், அரு உருவமாகியும் கடவுள் ஒருவரே’ உள்ளார். கடவுள் ஒருவர் தான் என்று வள்ளலார் கூறினார். அவர் கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக கண்டார். அருட்பெருஞ்ஜோதி வழிபாடு எந்த சமயத்திற்கும் பொருந்துவது.

சன்மார்க்கத்தின் முடிவு சாதிப்பதற்காகவே, சகாதேவனே சன்மார்க்கி. உடம்பு 96 தத்துவங்களால் ஆனது. ஆன்ம தத்துவம் 24, வித்தியா தத்துவம் 7, சிவ (சுத்த)தத்துவம் 5, புறக்கருவிகள் 60 என்று வள்ளலார் கூறினார். 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அன்று தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆனார்.

வள்ளலாரின் வாழ்க்கை சரித்திரத்தை கைக்கொள்ளும் நாமும் அவரை போன்று இறைவனோடு ஒன்றி வாழ நம்மை அர்ப்பணிப்போம்.
Tags:    

Similar News