செய்திகள்
மழை

கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை

Published On 2021-09-26 04:56 GMT   |   Update On 2021-09-26 04:56 GMT
கடலூர் மஞ்சக்குப்பம், புதுநகர், முதுநகர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
கடலூர்:

வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புயல் இன்று வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய கலிங்கப்பட்டிணம் என்ற இடத்தில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சிகாரணமாகவும், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலூரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் பலத்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

கடலூர் மஞ்சக்குப்பம், புதுநகர், முதுநகர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

இடி-மின்னலுடன் பலத்தமழை பெய்ததால் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு மின்தடை ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மின்விநியோகம் இல்லாததால் கடலூர் நகரமே இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தபோதும், நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக கடலூர் பகுதியில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
Tags:    

Similar News