உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

வடசேரி அரசு பள்ளியில் மாணவர்கள்-ஆசிரியர்கள் 11 பேருக்கு கொரோனா

Published On 2022-01-15 06:10 GMT   |   Update On 2022-01-15 06:10 GMT
இருளப்பபுரம் பகுதில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு பணிபுரிந்த சக ஊழியர்கள் 110 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

பறக்கை செட்டி தெரு பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த தெருவை தற்காலிகமாக மாநகராட்சி அதிகாரிகள் மூடியுள்ளனர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நாகர்கோவிலில் 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் வடசேரி அரசு பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு வேலை பார்க்கும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில் மேலும் இரண்டு ஆசிரியர்களுக்கும் 7 மாணவர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அந்த பள்ளியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.

இருளப்பபுரம் பகுதில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு பணிபுரிந்த சக ஊழியர்கள் 110 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில் மேலும் 10-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த பிளாஸ்டிக் கம்பெனி மூடப்பட்டுள்ளது. கம்பெனியில் பணிபுரிந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

காமராஜபுரம், பார்வதிபுரம், கிருஷ்ணன்கோவில், வடசேரி, கோட்டார் பகுதிகளில் உள்ள பொதுமக்களும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாகர்கோயில் நகரில் கொத்துக்கொத்தாக பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதை தடுப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு ஊருக்கு வந்து உள்ளனர்.

ஊருக்கு வந்தவர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அந்த பகுதியில் உள்ள சுகாதார மையங்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எச்சரிக்கையுடன் கவனமாக சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News