வழிபாடு
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-02-21 05:01 GMT   |   Update On 2022-02-21 05:01 GMT
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது.

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக உற்சவ கொடியுடன் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர்-தருனேந்தசேகரி, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் 4 வீதிகளிலும் உலா வந்து தியாகராஜர் கோவிலை அடைந்து கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். அங்கு சிறப்பு யாகபூஜையுடன் 54 அடி உயரம் உள்ள கொடி மரத்திற்கு சந்தனம், பால், பன்னீர், மஞ்சள். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து உற்சவ கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மேள தாளங்கள் முழங்க பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் உற்சவ கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தியாகராஜர், சண்டிகேஸ்வரர் சன்னதியில் வைத்து உற்சவ பத்திரிக்கை விவரம் பக்தர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

விழாவில் பரம்பரை அறங்காவலர் தியாகராஜன், பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், செயல் அதிகாரி கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம்(மார்ச்) 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆகமவிதிப்படி ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டும் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News