செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

ஆலங்குளம் அருகே மினிபஸ் மோதி வாலிபர் பலி

Published On 2019-11-06 10:39 GMT   |   Update On 2019-11-06 10:39 GMT
ஆலங்குளம் அருகே மினிபஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரை சேர்ந்தவர் முருகன். இவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகன் பவித்ரலட்சுமணன்(வயது 22). இவர் டிரம்ஸ் செட் வைத்து நடத்தி வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்த்தவர்களை காட்டூரில் விட்டுவிட்டு பின்னர் ஐந்நாங்கட்டளை வழியாக ஆலங்குளத்திற்கு பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த மினிபஸ் ஒன்று பவித்ரலட்சுமணன் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். உடனே அவருடன் வந்த நண்பர்கள் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் பவித்ரலட்சுமணன் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பவித்ரலட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பவித்ரலட்சுமணன் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

விபத்தில் பலியான பவித்ரலட்சுமணன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் அதே ஊரை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். மேலும் அவரது மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் பலியான பவித்ரலட்சுமணனின் உறவினர்கள் கூறுகையில், தென்காசி அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்ட பவித்ரலட்சுமணனை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் உடனடியாக கவனிக்கவில்லை.

கிட்டதட்ட 2 மணி நேரம் அவருக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அவரது நண்பர்கள் கேட்டபோது, பவித்ரலட்சுமணனின் மூக்கு மற்றும் வாய் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறி வருகிறது. அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு தேவையான மாஸ்க் மற்றும் கையுறைகள் இல்லை, காலியாகிவிட்டது என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதையடுத்து அவரது நண்பர்கள் தனியார் ஆம்புலன்சில் நெல்லைக்கு கொண்டு சென்று காப்பாற்ற நினைத்துள்ளனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். பவித்ரலட்சுமணன் சாவிற்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியமே காரணம் என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News