ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கரையில் ஆஞ்சநேயர் சிலை நிறுவுவதற்கான பீடம் அமைக்க கான்கிரீட் தளம் அமைக்கப்படும் காட்சி.

ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு, பீடம் அமைக்கும் பணி தொடங்கியது

Published On 2021-08-20 05:50 GMT   |   Update On 2021-08-20 05:50 GMT
37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணிகள் ஸ்ரீரங்கம் மேலூரில் கொள்ளிட்டக்கரையில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை சார்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆஞ்சநேயருக்கு தமிழகத்தில் சென்னை நங்கல்லூரில் 33 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதைவிட உயரமாக அதாவது 37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணிகள் ஸ்ரீரங்கம் மேலூரில் கொள்ளிட்டக்கரையில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை சார்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பீடம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதற்கென சுமார் 10 அடி ஆழத்தில் குழி தோண்டி கான்கிரீட் அடித்தளம் மற்றும் பீடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிலை அமைப்பு குழுவினர் கூறியதாவது:-

நாமக்கல் பகுதியில் உள்ள குவாரியில் கல் தேடியபோது, 40 அடி உயரத்தில் ஒரே கல் கிடைத்தவுடன் 37 அடி உயர சிலை அமைப்பது என முடிவு எடுத்தோம். இதற்காக சுமார் 105 டன் எடையிலான ஒரே கல் வாங்கப்பட்டு, அதில் கலை நயத்துடன் சிலை வடிக்கும் பணிகள் முடிந்துள்ளன.

ஆஞ்சநேயர் சிலையுடன், அங்கு சிறிய அளவில் கோவிலும் அமைக்கப்பட்டு அதில், நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ராமர், சீதை, லட்சுமணன் உள்ளிட்ட சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அந்த சிலைகள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டு விட்டன. அனுமர் சிலை மட்டுமே கொண்டு வரவேண்டியுள்ளது.

இந்நிலையில் சிலை அமைப்பதற்காக பீடம் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கென பள்ளம் தோண்டப்பட்டு தரைக்கு கீழே 9 அடியும், தரையிலிருந்து மேலே 4 அடியும் என 13 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்படுகிறது. அதன் மேல் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். வருகிற மார்கழி மாதம் அனுமன் ஜெயந்திக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News