செய்திகள்
சசிகலா

சசிகலா சுற்றுப்பயணம் எப்போது?- ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-08-24 09:24 GMT   |   Update On 2021-08-24 09:24 GMT
சசிகலா தனது சுற்றுப்பயணத்தை எப்போது தொடங்குவார் என்கிற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சென்னை:

பெங்களூரு சிறையில் இருந்து சட்டமன்ற தேர்தல் சமயத்தில் விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார்.

ஆனால் திடீரென பின்வாங்கிய அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக கூறினார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிந்தபிறகு சசிகலா திடீரென தனது ஆதரவாளர்களிடம் போனில் பேசிய ஆடியோக்கள் வெளியானது. அதில் தேர்தலில் அ.தி.மு.க.வை நிச்சயம் வெற்றி பெற செய்வோம் என்று கூறி இருந்தவர்களால் அதனை செய்ய முடியவில்லை. எனவே நிச்சயம் எல்லாவற்றையும் சரி செய்து விடலாம். கொரோனா முடிந்தவுடன் உங்களையெல்லாம் நிச்சயம் சந்திப்பேன் என்று சசிகலா கூறி இருந்தார்.

இதன் மூலம் அவர் விரைவில் சுற்றுப்பயணம் செய்வார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே எதிர்பார்க்கப்பட்டது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சசிகலா அனைத்து மாவட்டங்களிலும் ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. அதிருப்தியாளர்களே மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இதற்காக அந்தந்த பகுதிகளில் திருமண மண்டபங்களை வாடகைக்கு அமர்த்த இருப்பதாகவும் கூறப்பட்டது. அதற்கு வசதியாக தமிழகத்தில் நேற்று முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதையடுத்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தை எப்போது தொடங்குவார் என்கிற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் விரைவில் சசிகலா எங்களை சந்திக்க வருவார் என்று நம்புவதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவை போல சசிகலாவும் நல்ல நாள் பார்த்து எதையும் தொடங்குவார் என்றும் சுற்றுப்பயணத்துக்கு அதுபோன்று அவர் நல்ல நாள் பார்த்து வருவதாகவும் ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

சுற்றுப்பயணம் தொடங்கும்போது ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, சசிகலா அனைத்து மாவட்டங்களுக்கும் நிச்சயம் செல்வார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு தி.நகரில் உள்ள வீட்டில் தங்கியிருக்கும் சசிகலா தொடர்ந்து அங்கேயே வசித்து வருகிறார். அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மரணமடைந்தபோது அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அங்கு சென்றும் மதுசூதனன் உடல்நிலையை பற்றி விசாரித்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் அ.தி.மு.க.வினரின் அன்பை மீண்டும் பெற சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News