செய்திகள்
முன் அறிவிப்பு இல்லாமல் மூடப்பட்ட ரெயில் டிக்கெட் முன்பதிவு மையத்தை படத்தில் காணலாம்.

ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி

Published On 2019-12-11 18:00 GMT   |   Update On 2019-12-11 18:00 GMT
மானாமதுரை ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
மானாமதுரை:

இந்திய சுதந்திரத்திற்குபின் தமிழகத்தில் திறக்கப்பட்ட 7 ரெயில்வே சந்திப்புகளில் மானாமதுரையும் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் அனைத்து ரெயில்களும் மானாமதுரை ரெயில் நிலையத்தில் டீசல் மற்றும் தண்ணீர் நிரப்பிய பின்னர் அங்கிருந்து புறப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு நான்கு திசைகளில் இருந்தும் பல்வேறு ரெயில்கள் வந்து செல்வதால் தற்போது சந்திப்பு ரெயில் நிலையமாக இயங்கி வருகிறது.

மேலும் மானாமதுரை, கமுதி, அபிராமம், திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பலரும் மானாமதுரை வந்து செல்வது வழக்கம். இதையடுத்து இந்த ரெயில் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கணினி முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது. தற்போது எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் இந்த முன்பதிவு மையம் திடீரென மூடப்பட்டதால் ரெயில் பயணிகள் கடும் அவதிஅடைந்துள்ளனர். மேலும் மூடப்பட்ட இந்த முன்பதிவு மையத்தில் தினசரி ரெயில்கள், வாராந்திர ரெயில்கள் உள்பட அனைத்து ரெயில்களுக்கும் செல்லும் பயணிகள் இந்த முன்பதிவு மையத்தில் தான் முன்பதிவு செய்வார்கள்.

இதையடுத்து இந்த முன்பதிவு மையம் மூடப்பட்டதால் தற்போது வழக்கமாக ரெயில் டிக்ெகட் வழங்கும் கவுண்ட்டரிலேயே முன்பதிவு செய்ய பயணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ரெயில் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:- மானாமதுரை ரெயில் நிலையம் முக்கியமான ரெயில் நிலையமாக இருந்து வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை, ராமேசுவரம், திருச்சி, விருதுநகர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர விரைவு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த ரெயில் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து முன்பதிவு செய்கின்றனர். இங்குள்ள முன்பதிவு மையம் திடீரென எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மூடப்பட்டதால் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் சாதாரண டிக்கெட் கவுண்ட்டரில் தான் முன்பதிவு செய்யும் நிலை உள்ளது.

இதனால் அவர்களுக்கு காலதாமதமும், மன உளைச்சலும் ஏற்படும் வகையில் உள்ளது. இது தவிர விேஷச காலங்களில் அதிகஅளவில் மக்கள் இந்த ரெயில்களில் தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். எனவே தென்னக ரெயில்வே நிர்வாகத்தினர் முன்அறிவிப்பு இல்லாமல் மூடிய இந்த ரெயில் முன்பதிவு மையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 
Tags:    

Similar News