ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாதசாமி

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2020-12-25 07:10 GMT   |   Update On 2020-12-25 07:10 GMT
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் இன்று (25- ந்தேதி) வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் தேவநாதசாமி கோவில் உள்ளது . 108 வைணவ தளங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி கடந்த 15 -ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. நேற்று 24 ந்தேதி பகல்பத்து உற்சவம் முடிவடைந்தது.

இன்று (25- ந்தேதி) வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைமுன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனையெடுத்து முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இதன் பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். அப்போது தேசிகர் எதிர்சேவை நடைபெற்றது. அப்போது குழுமியிருந்த பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என பக்தி கோ‌ஷங்களை எழுப்பி தேவநாதசுவாமியை தரிசித்தனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பயன்படுத்தி கிருமி நாசினி தெளித்து பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதித்தனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து தேவநாதசாமி வெளிப்பிரகாரம் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து மூலவரை தரிசிக்க பொதுமக்களை அனுமதித்தனர். பின்னர் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் வான்பாக்கம் சாலையில் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலையில் வேணுகோபாலசாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் மற்றும் தாயார் எழுந்தருளினர்.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோ‌ஷம் எழுப்பி பெருமாளை தரிசித்தனர். பின்னர் சாமி உள்பிரகாரமாக சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த பக்தர்கள் பஜனை செய்து பெருமாளை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரமேஷ் பட்டாச்சாரியர் செய்திருந்தார்.

நெல்லிக்குப்பம் புவனாம்பிகை சமேத பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசான வெங்கடாசலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத்தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர் பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரிபிரபு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News