செய்திகள்
கொரோனா தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியது

Published On 2021-09-17 07:43 GMT   |   Update On 2021-09-17 07:43 GMT
கொரோனா பிடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி திட்டம் மதுரை மாவட்டத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டம் காட்டி வரும் கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. முதல், 2-வது அலை காலகட்டங்களில் சுமார் 75 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 99 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போதைய நிலவரப்படி 196 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினசரி பாதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. இது மதுரை மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.

நேற்று 17 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சில நாட்களாக உயிரிழப்பும் ஏற்படவில்லை. கொரோனா பிடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி திட்டம் மதுரை மாவட்டத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கடந்த 8 மாதமாக நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் தற்போது அதிக அளவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 14 லட்சத்து 14 ஆயிரத்து 133 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

மேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தற்போது 53 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. இதனால் தொடர்ந்து அனைத்து முகாம்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட தொடங்கி உள்ளன. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை ஒரு மாணவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணிக்க கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்கி உள்ளனர்.

இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து பள்ளிகளிலும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. கல்லூரிகளை பொறுத்தவரை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகின்றன

மதுரை மாவட்டத்தில் 95 சதவீதம் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 1 முதல் 8 வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் மாணவ-மாணவிகளுக்கு தொற்று பரவாமல் இருக்கும் வகையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிகளில் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர், உடல் வெப்பநிலை சோதனை, முக கவசம், சமூக இடைவெளி, உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மாணவ- மாணவிகளிடம் அடிக்கடி வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகளும் தெளிக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த முகாம்களில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.

அதேபோல மீண்டும் ஒரு மெகா தடுப்பூசி முகாமை நடத்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் திட்டமிட்டுள்ளது. அதற்கு தேவையான தடுப்பூசிகள் கிடைத்ததும் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News