செய்திகள்
பரிசலில் ஆபத்தான வகையில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள்.

பவானி ஆற்றில் வெள்ளம் - பாலம் மூழ்கியதால் ஆபத்தான வகையில் பரிசல் பயணம் செல்லும் மாணவர்கள்

Published On 2019-11-05 12:33 GMT   |   Update On 2019-11-05 12:33 GMT
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் மூழ்கிய பாலத்தில் ஆபத்தான வகையில் மாணவ - மாணவிகள் பரிசலில் பயணம் செய்கின்றனர்.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, வெள்ளியங்காடு அருகே மலைப்பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் இயற்கை எழில் சூழலில் பில்லூர் அணை அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழைநீரை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் அணை காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடியாகும். காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.அணையின் நீர் மட்ட உயரம் 88 அடியாக இருந்தது.

மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்கியதில் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறியது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

பவானி ஆறு மற்றும் மாயாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தினசரி அதிகரித்து காணப்படுகின்றது.

பவானிசாகர் அணையில் நாள்தோறும் நீர்மட்ட உயரம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் வெள்ளம் தேங்கி கடல் போல்காட்சியளிக்கிறது. இதனால் சிறுமுகை அடுத்துள்ள லிங்காபுரம் அருகே காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. பவானிசாகர் அணையில் நீர்மட்ட உயரம் கிடுகிடு என உயர்ந்து வருவதால் நீர்த்தேக்கப்பகுதியில் நிமிடத்திற்கு நிமிடம் வெள்ளம் அதிகரித்து உயர்ந்து வருகின்றது.

இதன்காரணமாக காந்தையாற்று பாலத்தின் இரண்டு புறமும் உள்ள இணைப்பு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியுள்ளன . பாலத்தில் இருந்து லிங்காபுரம் செல்லும் வழியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமும்,காந்தவயல் செல்லும் வழியில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரமும் இணைப்பு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிக்காணப்படுகின்றது.

இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு தினசரி அவதிப்பட்டு வருகின்றனர்.

காந்தையாற்றைக்கடக்க தற்போது தனியார் சார்பில் 3 பரிசல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. லிங்காபுரம் பகுதியில் இருந்து காந்தவயல்பகுதி மற்றும் காந்தவயல் பகுதியில் இருந்து லிங்காபுரம் பகுதி வரை காந்தையாற்றைக்கடக்க பரிசலில் பயணம் செய்ய 1/2 மணி நேரம் ஆகின்றது.மாணவ-மாணவிகள் பரிசலில் இலவசமாக பயணம் செய்யலாம்.

ஆனால் பெரியவர்களுக்கு ரூ.5-ம், மொபட் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.25-ல் இருந்து ரூ.50 வரையும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

பரிசல் ஓட்டுபவர்களுக்கு தினசரி ரூ.600 கூலியாக கொடுக்கப்படுகின்றது.

காலையில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.பஸ் செல்லும் நேரத்தைக்கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் செல்லும் மாணவ மாணவிகள் காலை 7 மணிக்கும் மற்ற பகுதிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் காலை 8 மணிக்கும் பரிசல் பயணத்திற்கு தயாராக வந்து விடவேண்டும்.

பரிசலில் பயணம் செய்கின்றவர்களுக்கு சிறுமுகை பேரூராட்சி சார்பில் 9 லைப் ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் பரிசலில் பயணம் செய்யும் பொதுமக்கள் உள்பட மாணவ மாணவிகள் பாதுகாப்பு உபகரணங்களை அணிவதில்லை.

ஆபத்தான பரிசல் பயணத்தையே மேற்கொண்டு வருகின்றனர். எனவே காந்தையாற்றைக் கடக்க பரிசலுக்கு பதிலாக விசைப்படகை(ஸ்டீம் போட்) இயக்க வேண்டும் என்று அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News