செய்திகள்
சி.பி.ஐ.

சட்ட விரோத நிலக்கரி வர்த்தகம் : 45 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை

Published On 2020-11-28 20:05 GMT   |   Update On 2020-11-28 20:05 GMT
சட்ட விரோத நிலக்கரி வர்த்தகம் தொடர்பாக மேற்கு வங்காளம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 45 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுடெல்லி:

மத்திய அரசுக்கு சொந்தமான, கிழக்கு பிராந்திய நிலக்கரிவயல்கள் லிமிடெட் நிறுவனம் மேற்கு வங்காளத்தின் அசன்சோலை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்காளத்தின் பஷ்சிம் பர்தமான் மாவட்டத்துக்கு உட்பட்ட குனுஸ்டோரியா, கஜோரியா பகுதிகளில், இந்த நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன.

இந்த சுரங்கங்களில் இருந்து சட்ட விரோதமாக நிலக்கரியை எடுத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் அனுப் மஞ்சி என்பவர், கிழக்கு பிராந்திய நிலக்கரிவயல்கள் லிமிடெட் நிறுவனத்தின் 2 பொது மேலாளர்கள் மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து இந்த சட்ட விரோத நிலக்கரி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் மீதும், மேலும் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த நிலக்கரி திருட்டு மற்றும் விற்பனை தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று 45 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய 4 மாநிலங்களில் இந்த சோதனைகள் நடந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனுப் மஞ்சி மற்றும் கிழக்கு பிராந்திய நிலக்கரிவயல்கள் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பல இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

பல்வேறு அதிகாரிகளால் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்த சோதனை விவகாரம் மேற்படி மாநிலங்களில் நேற்று பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
Tags:    

Similar News