செய்திகள்
பா ஜனதா

பாராளுமன்ற முடக்கத்தால் ரூ.130 கோடி வீண்- பா.ஜனதா குற்றச்சாட்டு

Published On 2021-08-06 03:31 GMT   |   Update On 2021-08-06 03:31 GMT
2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் ஆகியவற்றை காங்கிரஸ் அரசு மறுத்தது. ஆனால், 2ஜி ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டே ரத்து செய்து, ஊழல் நடந்ததை உறுதிப்படுத்தியது.
புதுடெல்லி:

பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி எப்போதும் பாராளுமன்றத்தை மதிப்பது இல்லை. ஒரு குடும்பத்துக்கு சேவை செய்தால் மட்டுமே பாராளுமன்றத்தை இயங்க விடும். பாராளுமன்ற முடக்கத்தால் ரூ.130 கோடி வீணாகி விட்டது.

பெகாசஸ் விவகாரமோ, விவசாயிகள் போராட்டமோ அர்த்தமுள்ள விவாதத்துக்கு பா.ஜனதா தயாராக இருக்கிறது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த போதே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விளக்கம் கேட்டிருக்கலாம். அது விவாதத்துக்கு வழிவகுத்து இருக்கும். அதை விட்டுவிட்டு, அந்த அறிக்கையை பறித்து அவர்கள் கிழித்து வீசினர்.

மோடி அரசுக்கு விரோதமானவர்களும், மோடி எதிர்ப்பையே செயல்திட்டமாக கொண்டவர்களும்தான் பெகாசஸ் விவகாரம் உருவாக்கப்பட்டதற்கு பின்னணியில் உள்ளனர். அதனால்தான், பாராளுமன்றம் கூடும் நாளில் கசியவிடப்பட்டது.

ஆனால், வெளியான செல்போன் எண்கள், ஒட்டு கேட்கப்பட்டதற்கு அடிப்படை ஆதாரம் இருக்கிறதா? தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் அருண் மிஸ்ரா, ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படும் தனது செல்போன் எண்ணை கடந்த 2014-ம் ஆண்டே திரும்ப ஒப்படைத்து விட்டதாக கூறியுள்ளார்.

மோடி பிரதமராக இருப்பதையோ, அவர் தலைமையில் பா.ஜனதா தொடர் வெற்றி பெறுவதையோ காங்கிரசால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் இதற்கெல்லாம் காரணம்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தை பா.ஜனதாவும் முடக்கியதாக கூறுகிறார்கள். இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. அப்போது நடந்த 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் ஆகியவற்றை காங்கிரஸ் அரசு மறுத்தது. ஆனால், 2ஜி ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டே ரத்து செய்து, ஊழல் நடந்ததை உறுதிப்படுத்தியது.

மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றுவதாக கூறுகிறார்கள். கடந்த 2007-ம் ஆண்டும் இப்படித்தான் நடந்தது.

இவ்வாறு அவர் கூறினாா்.
Tags:    

Similar News