செய்திகள்
முட்டை

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சரிவு- பண்ணையாளர்கள் கலக்கம்

Published On 2019-09-05 11:54 GMT   |   Update On 2019-09-05 11:54 GMT
நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சரிந்து உள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நாமக்கல்:

தேசிய அளவில், கோழி முட்டை உற்பத்தியில், நாமக்கல் மண்டலம் தனி சிறப்பு பெற்றுள்ளது. இங்கு, பண்ணைகளில் வளர்க்கப்படும், 5 கோடி கோழிகள் மூலம், தினமும், 3.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழகம், கேரளா மாநிலத்துக்கு விற்பனை செய்தது போக, மீதமுள்ள முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த மண்டலத்தில் இருந்து, 1990-ம் ஆண்டு முதல், முதன் முதலாக குவைத் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆண்டுக்கு, 20 சதவீதம் என, படிப்படியாக உயர்ந்து, 2004-ம் ஆண்டு தினமும், ஒரு கோடி முட்டை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்தது. ஆனால், 2008-ம் ஆண்டு, வடமாநிலங்களில், பறவை காய்ச்சல் நோய் தாக்குதல் காரணமாக, ஏற்றுமதி பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில், முட்டை ஏற்றுமதி தினமும், 20 லட்சத்தில் இருந்து, கடந்த 2 மாதங்களில் படிப்படியாக குறைந்து, தற்போது, 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இது குறித்து நாமக்கலை சேர்ந்த கோழிப்பண்ணையாளர் சத்தியமூர்த்தி கூறியது:-

மக்களிடம் முட்டை வாங்குவது குறைந்த காரணத்தாலும், மூலத்தீவன விலை உயர்வாலும் முட்டை தொழில் வீழ்ச்சி அடைந்து விட்டது. இதனால் ஒரு முட்டைக்கு உற்பத்தி செலவு 1 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. முட்டை தொழில் இப்படியே நீடித்தால், தற்போதுள்ள 4 1/2 கோடி முட்டை உற்பத்தி 50 சதவீதம் குறைந்து கோழிப்பண்ணைகளை மூடும் நிலை ஏற்பட்டுவிடும்.

தமிழக அரசு சத்துணவிற்கு டெண்டரை மாவட்ட வாரியாக வழங்கியது. பின்பு மண்டல வாரியாக வழங்கியது. இப்போது தனியார் நிறுவனம் மட்டும் வழங்கி வருகிறது. முட்டை தொழிலை காக்க மூலப்பொருட்கள் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவிற்கு மண்டல வாரியாக முட்டைடெண்டரை கொண்டு வந்து அழிவில் உள்ள முட்டை தொழிலை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News