ஆன்மிகம்
இயேசு

நீதிமானல்ல பாவியே தேவை

Published On 2021-11-29 07:37 GMT   |   Update On 2021-11-29 07:37 GMT
மனம் திரும்பத் தேவையில்லாத தொன்னூற்று ஒன்பது நீதிமான்களை விட, மனம் திரும்பிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகம் மகிழும்’
இயேசுவின் போதனைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தன்னுடைய போதனைகளுக்கு இயேசு தேர்ந்தெடுத்த ஆயுதம் கதைகள். கதைகள் மூலமாக வாழ்க்கையைக் குறித்த கேள்விகளையும், ஆன்மீகம், நிலைவாழ்வு குறித்த விளக்கங்களைக் கொடுப்பதையுமே அவர் தன்னுடைய போதனைகளின் பாணியாகக் கொண்டிருந்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் அன்றைய வாழ்க்கை சார்ந்த கதைகளாகவே இருந்தன. அவருடைய கதைகளில் உலவும் கதாநாயகனும், வில்லனும் எல்லோரும் கதையைக் கேட்கும் மக்களுக்குப் பரிச்சயமானவர்களாகவே இருந்தார்கள். எனவே அவருடைய கதைகள் மக்களிடம் நேரடியாகச் சென்று சேர்ந்தன.

பெரும்பாலும் மலைப்பகுதிகளிலோ, ஏரிகளின் ஓரத்திலோ, ஏரியில் படகில் அமர்ந்து கரையில் இருக்கும் மக்களை நோக்கியோ தன்னுடைய போதனையைச் செய்வதையே இயேசு வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருடைய எளிய கதைகள் இதுவரை மக்கள் அறிந்திராத சட்டநூல்களின் கடின பாகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவற்றை மிக எளிமையாக விளக்கின.

அவருடைய போதனையின் முக்கியமான நோக்கம் தெளிவு படுத்துதல். மக்களுக்குப் புரியாத சட்டங்களையும், உண்மைகளையும், தன்னை நோக்கி வீசப்படும் கேள்விகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்துதல். எது உண்மை எதை கடைபிடிக்கவேண்டும் என்பதை சட்டென்று புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாய் எடுத்துரைத்தல். இது தான் இயேசுவின் போதனைகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் தூண்டின. இதற்கு முன் வந்த இறைவாக்கினர்கள் பலர் செய்யாத செயல் இது ! எனவே இயேசு அதிகமாகக் கவனிக்கப்பட்டார்.

அவற்றிலும் சில போதனைகள் கதைகளின் வழியாகப் பயணித்து புரியாத ஒரு செய்தியை நோக்கிய கேள்விகளை எழுப்பின. எனவே தான் பல வேளைகளில் இயேசுவின் சீடர்களே இயேசு சொன்ன கதைகளுக்கான விளக்கங்களை தனியே இயேசுவிடம் கேட்க நேர்ந்தது.

அவருடைய கதைகளில் விவசாயிகள், ஏழைகள், தோட்டம் வைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள், பயணிகள் இவைகளைச் சார்ந்தே இருந்தன. இவையெல்லாம் மக்களுக்குப் பரிச்சயமான களங்கள்.

இயேசுவை நோக்கிக் கேள்விகள் வீசப்படும் போதெல்லாம் பெரும்பாலும் கதைகளாலேயே விளக்கம் கொடுத்தார் இயேசு.

மறைநூல் வல்லுனர்களும், குருக்களும் இயேசுவைப் பார்த்து, ‘இறைவாக்கினர்கள் என்பவர்கள் மிகவும் தூய்மையானவர்கள். அவர்கள் தூய்மை முறைகள் அனைத்தையும் கடைபிடிக்கவேண்டும். அதை விடுத்து பாவிகளோடும், ஒதுக்கப்பட்டவர்களோடும் உணவருந்துவதும், உரையாடுவதும் முறையற்ற செயல்’ என்று குற்றம் சுமத்தினார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,‘ஒருவருக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன. அதை அவர் மேய்ச்சலுக்காகக் கூட்டிப் போகிறார். மேய்ச்சலை முடித்து விட்டு மாலையில் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டி வரும்போது ஒரு ஆடு குறைவு படுகிறது என்றால் அவன் என்ன செய்வான் ? அந்த தொன்னூற்று ஒன்பது ஆடுகளையும் அங்கேயே விட்டு விட்டு, காணாமல் போன ஒரு ஆட்டைத் தேடிப் போக மாட்டானா ? அதைக் கண்டு பிடித்தபின். ஆஹா… வழி தவறிப்போயிருந்த ஆட்டை கூட்டி வந்து விட்டேன் என்று ஆனந்தப் படமாட்டானா ? அந்த ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டு விட்டு மற்ற ஆடுகள் இருக்கும் இடத்துக்கு ஆனந்தமாய் ஓடி வர மாட்டானா ?’ என்று கேட்டார்.

‘வருவான்… ‘ அவர்கள் பதில் சொன்னார்கள்.

‘அதன் பின் அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து. வாருங்கள் என்னோடு மகிழுங்கள் காணாமல் போயிருந்த ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். என்று சொல்வான் இல்லையா ?’

‘ஆமாம். அதற்கென்ன ?’

‘அதே போலத் தான், மனம் திரும்பத் தேவையில்லாத தொன்னூற்று ஒன்பது நீதிமான்களை விட, மனம் திரும்பிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகம் மகிழும்’

இயேசு கதையை முடித்தார்.

பாவிகளோடு தான் பழகுவதற்குக் காரணம் அவர்களுடைய பாவ வாழ்க்கையை சரிசெய்வதற்கே என்பதை இயேசு விளக்குகையில் கூட்டத்தினர் புரிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் ஆடு மேய்ப்பது அங்கே வழக்கமான செயல். ஒரு ஆடு காணாமல் போனாலும் மற்ற ஆடுகளை மேய்ப்பன் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு தொலைந்த ஆட்டைத் தேடிப் போவான் என்பது அனைவருக்கும் தெரிந்த செயல், எனவே இயேசு தன்னுடைய பணியை ஒரு மேய்ப்பனுடன் ஒப்பிடுகையில் மக்கள் கூட்டம் புரிந்து கொள்கிறது.
Tags:    

Similar News