உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தேர்தல் பிரசார டீ-சர்ட் தயாரிக்கும் பணியில் திருப்பூர் பனியன் நிறுவனங்கள் மும்முரம்

Published On 2022-01-29 07:00 GMT   |   Update On 2022-01-29 07:00 GMT
கொரோனா பரவலின்போது முககவசம் மற்றும் கவச உடைகளும் தயாரிக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் மூலம் பனியன் உள்ளிட்ட ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

மேலும் ஐ.பி.எல்.உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள், கோவில் திருவிழாக்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு ஆர்டரின் பேரில் டீ-சர்ட் பனியன்கள் தயாரித்து கொடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலின் போது முககவசம் மற்றும் கவச உடைகளும் தயாரிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினருக்கு கட்சி சின்னத்துடன் கூடிய முககவசம் மற்றும் டீ-சர்ட் பனியன்கள், தொப்பிகள், கட்சி கொடிகள் தயாரிக்கப்பட்டன. 
 
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சி சின்னம், தலைவர்கள், வேட்பாளர் படங்கள் பொறித்த ‘டீ -சர்ட்’களை அணிந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது வழக்கம். இதையடுத்து அதனை தயாரிப்பதற்கு திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.

இதுகுறித்து ஆடை உற்பத்தியாளர் சதீஷ்குமார் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தலுக்காக வெள்ளை, சிவப்பு, பச்சை நிற பிளைன் ‘டீ -சர்ட்’களை அதிக எண்ணிக்கையில் தயாராக வைத்துள்ளோம். ஆர்டர் அடிப்படையில் கட்சி தலைவர், சின்னம், வேட்பாளர் படம், வாசகங்களை பிரிண்டிங் செய்து கொடுத்துவிடுவோம். ஆர்டர் வழங்கிய 2 நாட்களில் டீ சர்ட் தயாராகிவிடும்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என அனைத்து கட்சியினரும் ‘டீ-சர்ட்’ விலை குறித்து கேட்டு வருகின்றனர். ஓரிரு நாட்களில் அதிக எண்ணிக்கையில் ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது நூல் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இதனால், ‘டீ  -சர்ட்’ விலையையும் சற்று உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.
Tags:    

Similar News