செய்திகள்
தனவேலு எம்.எல்.ஏ.

என்னை நீக்க மாநில கட்சிக்கு அதிகாரம் இல்லை- தனவேலு எம்.எல்.ஏ. விளக்கம்

Published On 2020-01-16 13:20 GMT   |   Update On 2020-01-16 13:20 GMT
காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. தனவேலு, தன்னை நீக்க மாநில கட்சிக்கு அதிகாரம் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட தனவேலு எம்.எல்.ஏ. இன்று சட்டசபையில் உள்ள அவரின் அலுவலக அறையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். காங்கிரஸ் கட்சிக்கு நான் துரோகம் செய்யவில்லை. முதல்-அமைச்சர், அமைச்சர்களின் ஊழலைத் தான் தட்டி கேட்டேன். என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு மாநில காங்கிரசுக்கு அதிகாரம் கிடையாது. அகில இந்திய காங்கிரஸ்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

எனக்கு விளக்கம் கேட்டு எந்த நோட்டீசும், கடிதமும் வரவில்லை. அப்படி வந்தால் அதற்குரிய பதில் தர தயாராக உள்ளேன். முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதையே நான் கூறுகிறேன். அரசு துறைகளில் பல துறைகளை மூட அமைச்சர்கள்தான் காரணமாக உள்ளனர். நான் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.

நான் 5 ஆண்டு நீடிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ராகுல்காந்தி, சோனியாகாந்தியை சந்திக்க நான் நேரம் கேட்டுள்ளேன். அவர்கள் நேரம் ஒதுக்கித் தருவார்கள் என நம்புகிறேன். நேரம் ஒதுக்கித்தந்தால் நான் அவர்களிடம் முதல்- அமைச்சர், அமைச்சர்களின் ஊழல்களை ஆதாரத்துடன் கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் ஆட்சியை மாற்றுவதற்கு முயற்சி செய்தீர்கள் என முதல்-அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளாரே? என கேட்டபோது, அப்படியொரு சம்பவம் எப்போது நடந்தது? என்றே தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அப்போதே என் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே?

நான் புதிதாக அரசை எதிர்க்கவில்லை. பலமுறை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளேன் என தெரிவித்தார்.


மேலும் ஊழல் குற்றச் சாட்டுகளை சபாநாயகரிடம் அளிப்பீர்களா? என்று கேட்டபோது, சபாநாயகருக்கே இதில் தொடர்புண்டு. எனவே ஊழல் புகாரை யாரிடம் கொடுக்க முடியும்? இதனால்தான் கட்சித்தலைமையிடம் நேரில் சந்தித்து அளிப்பேன் என கூறியுள்ளேன். கட்சித் தலைமையும் நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.ஐ. வசம் புகார் தெரிவிப்பேன்.

நமச்சிவாயம் மாநில காங்கிரஸ் தலைவராக தொடர என் கடிதம்தான் காரணம். மாநில தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்க முடிவு செய்திருந்தனர். அப்போது அக்கார்டு ஓட்டலில் தங்கியிருந்த மேலிட பார்வையாளரிடம் நமச்சிவாயத்தை நீக்கக்கூடாது என 4 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு கடிதம் அளித்தோம். அந்த கடிதத்திற்கு ராகுல்காந்தியிடம் இருந்து பதில் வந்தது.

உங்கள் கோரிக்கையை ஏற்று மாநில தலைவராக நமச்சிவாயம் நீடிப்பார் என தெரிவித்திருந்தார். இதை நான் நமச்சிவாயத்திடம் அளித்தபோது மகிழ்ச்சி யடைந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News