லைஃப்ஸ்டைல்
குட்டி தேவதைகளுக்குள் குட்டிச் சாத்தான்கள்

குட்டி தேவதைகளுக்குள் குட்டிச் சாத்தான்கள்

Published On 2020-11-16 06:07 GMT   |   Update On 2020-11-16 06:07 GMT
அம்மா-மகள் உறவு உலகத்திலே மிக அழகானது; அற்புதமானது. அந்த உறவை மேம்படுத்தும் பொறுப்பு அம்மாக்களிடம்தான் இருக்கிறது. அதை அம்மாக்கள் கவனமாக கையாள வேண்டியது அவசியம்.
அம்மா-மகள் உறவு உலகத்திலே மிக அழகானது; அற்புதமானது. அந்த உறவை மேம்படுத்தும் பொறுப்பு அம்மாக்களிடம்தான் இருக்கிறது. அதை அம்மாக்கள் கவனமாக கையாள வேண்டியது அவசியம். அற்புதமான தாயாக விரும்பும் பெண்கள், மகள் சிறு வயதாக இருக்கும்போதே அதற்குரிய செயல்பாடுகளை தொடங்கிவிடவேண்டும்.

ஐந்து வயது சிறுமியாக இருக்கும்போதே மகளுக்குரிய நேரத்தை ஒதுக்க, தாயார் முன்வரவேண்டும். அவளது குட்டி உலகத்து கனவுகள், கற்பனைகளை எல்லாம் மனந்திறந்து, தன்னோடு பேசும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ‘என் அம்மாவுக்கு நான் ஒரு தேவதை. என் ஆசைகளை எல்லாம் என் அம்மா நிறைவேற்றி வைப்பார்’ என்ற நம்பிக்கையை அவளுக்கு உருவாக்க வேண்டும். உனக்கு ஒரு சோகம் என்றால், சாய்ந்து அழ என் தோள்கள் எந்நேரமும் காத்திருக்கும் என்பதை உணர்த்த வேண்டும்.

இப்படி எல்லாம் உங்கள் மகளை வளர்த்தாலும், அவள் 15 வயதை எட்டும்போது சூழ்நிலைகள் மாறத்தான் செய்யும். கோபம் கொள்வாள்; ஆத்திரப்படுவாள்; கலகம் செய்வாள். அப்போது அவளது அத்தனை செயல்களிலும் மூக்கை நுழைத்துக்கொண்டு, அவளோடு சேர்ந்து தாயும் பிடிவாதம் பிடித்து போராட வேண்டியதில்லை. சில விஷயங்களை கண்டும் காணாததும்போல் கடந்து போய்விட வேண்டும். ‘டீன்-ஏஜில்’ இப்படித்தான் கலாட்டா செய்வார்கள் என்பதை புரிந்துகொண்டு, அவ்வப்போது மெதுவாக தலையிட்டு மென்மையாக இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அடுத்த 10 வருடங்களை இதமாக கையாண்டால், 25 வயதில் மகள், தாயின் அன்பிற்குரிய தோழியாகிவிடுவாள்.

டீன்-ஏஜ் மகள்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அம்மாக்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு, ஒரே மாதிரிதான் இருக்கிறது. ‘அம்மா என் மீது தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிக்கிறார். என்னை இப்போதும் சின்ன குழந்தைபோல் நடத்துகிறார். அவர் விரும்பியது போல்தான் நான் நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்’ என்பதுதான்.

உண்மையில் ‘டீன்-ஏஜ்’ மகள்கள் மீது எல்லா அம்மாக்களும் அதிகபட்ச அக்கறை செலுத்துகிறார்கள். அந்த அக்கறையை வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்கள். அந்த வெளிப்பாடு மகளுக்கு கோபத்தை உருவாக்குகிறது. மகள்களின் தோற்றம், அலங்காரம், செயல்கள் அத்தனையிலும் தாய்மார்கள் தலையிடக்கூடாது. மகள்களின் எல்லா நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் போக்கை கைவிட வேண்டும். அதே நேஇரத்தில் பிரச்சினைக்குரிய நட்புகள், பிரச்சினைக்குரிய பழக்க வழக்கங்களில் தாயார் தலையிட்டுதான் ஆகவேண்டும்.

பெரும்பாலான அம்மாக்கள், தன்னைப்போலவே தன் மகளும் வளரவேண்டும், வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த எதிர்பார்ப்பு தவறு. தன் மகளாகவே இருந்தாலும் அவள் இன்னொரு பெண். அவளுக்கென்று தனித்துவம் இருக்கும். அவளை அவளாக வளர அனுமதிக்கவேண்டும். ஒரு தாய் தன் மகளுக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு, அவளை அவளாக வளர அனுமதிப்பதுதான்.

மகளுக்கு, தாயார் பொறுப்புகளை வழங்கவேண்டும். எல்லா முடிவுகளையும் தாங்களே எடுத்துவிட்டு, அதற்குள் அவளை கட்டுப்படுத்த முயற்சிக்காமல், முடிவுகள் எடுக்கும் வாய்ப்புகளை அவளுக்கு வழங்கவேண்டும். அவள் முடிவுகள் எடுத்த பின்பு அதில் இருக்கும் நிறைகுறைகளை அலசி, அடுத்தடுத்த முடிவுகளை சிறப்பாக எடுக்க அனுமதிக்கவேண்டும்.

மகளோடு தாய் அதிக நேரம் பேசவேண்டியதில்லை. ஆனால் அவளோடு இணைந்து அதிகநேரம் செயல்பட வேண்டும். அதன் மூலம் மகள் தனது வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களை தாயின் செயல்பாடுகளில் இருந்து பெறுவாள். அதிக எதிர்பார்ப்புகள் கொண்டவளாக மகளை வளர்த்து விடக்கூடாது. எல்லாவற்றிலும் யதார்த்தங்களை மகளுக்கு புரிய வைக்கவேண்டும். தாயும், மகளும் வெவ்வேறு மனிதர்கள். ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், குணாதிசயங்கள், கருத்துக்கள் இருக்கும். மகளிடம் இருக்கும் தனித்துவங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் தாய்மார்களிடம் இருக்கவேண்டும்.
Tags:    

Similar News