செய்திகள்
வீராணம் ஏரி வி.என்.எஸ். மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சி.

வீராணம் ஏரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு- 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2021-11-28 04:58 GMT   |   Update On 2021-11-28 04:58 GMT
கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேட்டூர் அணை தண்ணீரும் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது.
காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில்  வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை திறப்பு மூலமும் தண்ணீர் வரத்து இருக்கும்.

கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேட்டூர் அணை தண்ணீரும் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது. ஏரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி வரக்கூடிய 800 கனஅடிநீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

இது தவிர வெள்ளியங்கால் ஓடை வழியாக 1,000 கனஅடி தண்ணீரும், வி.என்.எஸ். மதகு வழியாக 1,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

வடவாறு வழியாக 1,685 கனஅடி நீர் ஏரிக்கு வருகிறது. ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வீரமுடையான்சத்தம், குமராட்சி, வெள்ளூர், நடுத்திட்டு, பருத்திக்குடி, சிவாயம், நந்திமங்கலம் உள்பட 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags:    

Similar News