செய்திகள்
திமுக

தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி நாளை போராட்டம்

Published On 2020-10-14 08:58 GMT   |   Update On 2020-10-14 08:58 GMT
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை நீக்க கோரி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நாளை போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா வரம்பு மீறி செயல்படுகிறார். எனவே அவரை டிஸ்மிஸ் செய்ய கவர்னரிடம் முதல்-அமைச்சர் பரிந்துரை செய்ய வேண்டும். இல்லை என்றால், தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இதையடுத்து போராட்டம் நடத்துவது குறித்து தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு மாநில அரசின் நிதி தேவை இல்லை என்று கூறி சிறப்பு வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைப்பதா? உயர் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மாநில அரசிடம் இருக்கும் பல்கலைக்கழக உயர் கல்வி உரிமையை இழக்க சம்மதிப்பதா?

இட ஒதுக்கீட்டிற்கும், மாநில நிதி உரிமைக்கும் எதிராக செயல்படும் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யாமல் இன்னும் அ.தி.மு.க. அரசு வாய் மூடி மவுனமாக இருக்க காரணம் என்ன? உடனடியாக சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இறுதிவரை தொடர வேண்டும். இந்த முடிவை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும்.

இந்த வேண்டுகோளை முன்வைத்து தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பு போராட்டம் நடத்துகிறது.

போராட்டத்தின் முன்னுரையாக நாளை (வியாழக்கிழமை) முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் தி.மு.க. தலைவர் கட்டளைப்படி நடத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.

யார் யார் தலைமையில் எங்கு போராட்டம் நடத்துவது என்பது பற்றிய முடிவு இன்று நடைபெறும் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் ஆரப்பாட்டத்தில் பங்கேற்கும் இடம் முடிவு செய்யப்படுகிறது.
Tags:    

Similar News