செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நளினியை விடுதலை செய்ய முடியாது- ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Published On 2020-01-07 07:36 GMT   |   Update On 2020-01-07 07:36 GMT
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாது என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், என்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை.

இதற்கிடையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நான் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி இயற்றப்பட்டது.

 


இந்த தீர்மானத்துக்கு இதுவரை தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். எனவே என்னை விடுதலை செய்யாமல் சிறையில் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், ஐகோர்ட்டில் என்னை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்னை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கள் ஆர்.சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி, நளினியை விடுவிக்க கோரிய மனுவை கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு நிராகரித்து உத்தரவிட்டுள்ளது’ என்று கூறி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கை வருகிற 28-ந்தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News