செய்திகள்
கோப்புப்படம்

மார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி

Published On 2020-02-24 04:32 GMT   |   Update On 2020-02-24 04:32 GMT
மார்ச் 1-ந்தேதி முதல் அனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரும் என வருவாய்த்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வருகிறது.

தற்போது அரசு லாட்டரிகளுக்கு 12 சதவீதமும், அரசு அங்கீகாரத்துடன் நடத்தப்படும் லாட்டரிகளுக்கு 28 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் லாட்டரிகளுக்கு ஒரே விதமாக 28 சதவீதம் வரிவிதிக்க கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் லாட்டரிக்கு ஒரே விதமாக 12 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்று அந்த துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. மார்ச் 1-ந்தேதி முதல் அனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரும்.


இது தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் கூறி இருப்பதாவது:-

லாட்டரிகளுக்கான ஜி.எஸ்.டி. விகிதம் திருத்தப்படுவது குறித்து மத்திய வரிகள் வாரியம் ஏற்கனவே அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய, மாநில அரசுகள் சார்பில் தலா 14 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட உள்ளது. ஒட்டு மொத்தமாக லாட்டரி மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும். இது வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News