ஆன்மிகம்
வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்

Published On 2021-02-27 08:54 GMT   |   Update On 2021-02-27 08:54 GMT
திருவனந்தபுரத்தில் இன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கலிடும் விழா இன்று தொடங்கியது. கோவிலில் பொங்கல் விழா தொடங்கியது என்ற அறிவிப்பு வெளியானதும் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட தொடங்கினர்.
திருவனந்தபுரம்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கலிடும் விழா இன்று காலை தொடங்கியது.

இதற்காக கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் கோவில் தந்திரி காலை 10.50 மணிக்கு தீ மூட்டினார். தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால் இம்முறை கோவிலில் பக்தர்கள் பொங்கலிட அனுமதி வழங்கப்படவில்லை. பொங்கல் நாளான இன்று அவர்கள் வீடுகளிலேயே பொங்கலிட்டு அம்மனை வழிபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அதன்படி இன்று காலை கோவிலில் பொங்கல் விழா தொடங்கியது என்ற அறிவிப்பு வெளியானதும் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட தொடங்கினர். பொங்கல் நைவேத்திய நிகழ்ச்சி இன்று மாலை 3.40 மணிக்கு நடக்கிறது.

பொங்கல் நைவேத்திய சடங்குகளில் கோவில் பூஜாரி கள் பங்கேற்க மாட்டார்கள். திருவிழாவின் 10-ம் நாளான நாளை(28-ந்தேதி) இரவு குருதி தர்ப்பணத்துடன் பொங்கல் விழா நிறைவடை கிறது.
Tags:    

Similar News