ஆன்மிகம்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை

அனுமன் ஜெயந்தி விழா: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை

Published On 2019-12-25 04:08 GMT   |   Update On 2019-12-25 04:14 GMT
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி அதிகாலை 5 மணி அளவில் கோவில் நடைதிறக்கப்பட்டு, சாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 11 மணி வரை அதே அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

11 மணிக்கு மேல் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டு வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய தனி வழி அமைக்கப்பட்டு இருந்தன.

ஆஞ்சநேயரை தரிசிப்பதற்காக நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி ஈரோடு, கரூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் வடை பிரசாதம் வழங்கப்படுகிறது.

கோவிலின் நுழைவு வாயிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி என மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் ஊதா உள்ளிட்ட நிறங்களில் 2 டன் சாமந்தி, ஆஸ்டர் வகை பூக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பாதுகாப்புக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கோவில் மற்றும் கோவில் வளாகத்தை சுற்றிலும் 45 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News