ஆன்மிகம்
பழனி அடிவாரம் பாத விநாயகர் கோவில் அருகே குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

தைப்பூசம், வார விடுமுறையையொட்டி பழனி கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2021-01-25 03:40 GMT   |   Update On 2021-01-25 03:40 GMT
பழனி முருகன் கோவிலில், தைப்பூசம் மற்றும் வார விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் 3-ம்படைவீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

குறிப்பாக வார விடுமுறை, மாத கார்த்திகை, சஷ்டி ஆகிய விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை, மாலை வேளையில் திண்டுக்கல் சாலை, உடுமலை சாலை, கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தைப்பூச திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிகாலை முதலே பழனியில் குவிந்தனர். இதனால் அடிவாரம் பாதவிநாயகர் கோவில் பகுதி, சன்னதி வீதி, பூங்கா ரோடு, பஸ்நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் திரளாக காணப்பட்டனர்.

பக்தர்கள் வருகையால் திருஆவினன்குடி கோவில், மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் பாதைகளான படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

அவர்கள் மலைக்கோவிலில் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தற்போது பல இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே நாளை நடக்கும் குடியரசு தின விழாவை முன்னிட்டு ராஜகோபுரம், தங்க கோபுரம் ஆகியவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News