செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவையில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 150-க்கும் கீழ் சென்றது

Published On 2020-11-24 10:02 GMT   |   Update On 2020-11-24 10:02 GMT
கோவையில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150-க்கும் கீழ் சென்றது.
கோவை:

கோவையில் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்று வந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு முதல் முறையாக கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அது படிப்படியாக தொற்று எண்ணிக்கை உயர்ந்துகொண்டே சென்றது. குறிப்பாக கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 300 முதல் 598 வரை சென்றது. இதனால் கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி ஒரே நாளில் 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தொற்று 4 மாதங்களுக்கு பிறகு குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதன் மூலம் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 150-க்கும் கீழ் சென்றது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியான கொரோனா பட்டியலில், கோவை மாநகரம், புறநகர் பகுதிகளை சேர்ந்த 140 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 676 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கோவையில் நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

இதுதவிர கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 163 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் கோவையில் இதுவரை 46 ஆயிரத்து 379 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 698 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News