செய்திகள்
விற்பனைக்கு வந்த செம்மறி ஆடுகள்.

செஞ்சி வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Published On 2021-07-16 08:04 GMT   |   Update On 2021-07-16 08:04 GMT
பெங்களூர் மற்றும் சேலம், திருவண்ணாமலை, வேலுர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய செஞ்சி வார சந்தைக்கு வந்து குவிந்தனர்.

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம்.

இங்கு தர்மபுரி, வேலூர், ஆம்பூர் மற்றும் புதுவை, பெங்களுர் போன்ற மாநிலங்களில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

வருகிற 21-ந்தேதி பக்ரீத் பண்டிகை ஆகும். இதையொட்டி இன்று கூடிய வாரச்சந்தையில் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பெங்களூர் மற்றும் சேலம், திருவண்ணாமலை, வேலுர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய செஞ்சி வார சந்தைக்கு வந்து குவிந்தனர்.

அதற்கேற்றாற் போல் கிராமப்பகுதிகளிலிருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக செம்மறி ஆடுகள் ரூ.3000 முதல் ரூ.4000 வரையிலும் ஆடி அமாவாசையொட்டி கருப்பு ஆடுகள் ரூ.8000 முதல் ரூ.15,000 வரை விற்கப்பட்டது.

இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். உடனுக்குடன் ஆடுகள் விற்பனை ஆனதால் கிராமப்புற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

Similar News