ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட்ட போது எடுத்த படம்.

அனுமதி வழங்கப்படாததால் கோவில் முன்பு நின்று தரிசித்த பக்தர்கள்

Published On 2021-08-28 05:49 GMT   |   Update On 2021-08-28 05:49 GMT
பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கோவில் முன்பு சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முக்கிய கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டும் நடத்தப்படுகிறது. இதனால் பக்தர்கள் கோவில்களில் தரிசிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.

நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த ஏராளமான பக்தர்கள் கோவில் பூட்டி இருந்ததால் கோவில் தெற்கு வாசலில் உள்ள ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சூடம் மற்றும் விளக்கேற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டு சென்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் அங்கிருந்த போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

இதேபோல் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கோவில் முன்பு சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.

திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள நாகநாதர் சுவாமி கோவில், திருச்சி இ.வி. ரோடு பகுதியில் உள்ள பூலோகநாதர் சுவாமி கோவில், பெரிய கடைவீதியில் உள்ள பைரவர் கோவில் மற்றும் அங்காளம்மன் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், திருச்சி கோர்ட் அருகே உள்ள அய்யப்பன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் மற்றும் பஞ்சவர்ண சுவாமி கோவில்.

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில், வயலூர் முருகன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சாமிகளை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர். அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் கோவில்களில் தினமும் பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News