செய்திகள்
மதுரை மேற்கு

அமைச்சர் செல்லூர் ராஜூ கைவசம் தொடர்ந்து இரண்டு முறை இருக்கும் மதுரை மேற்கு தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-21 06:22 GMT   |   Update On 2021-03-21 06:22 GMT
தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று 3-வது முறையாக களம் இறங்கியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ. திமுக சார்பில் பெண் வேட்பாளர் சின்னம்மாள் நிறுத்தப்பட்டுள்ளார்.
சொத்து மதிப்பு

செல்லூர் ராஜூ

1. கையிருப்பு- ரூ. 2,45,650
2. அசையும் சொத்து- ரூ. 37,05,092.70
3. அசையா சொத்து- ரூ. 9,14,083

சின்னம்மாள்

1. கையிருப்பு- ரூ. 85,000
2. அசையும் சொத்து- ரூ. 21,51,660.12
3. அசையா சொத்து- ரூ. 11,93,35,296

இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1967 என். சங்கரய்யா இந்தியப் பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்)
1971 கே.டி.கே.தங்கமணி (இந்தியப் பொதுவுடமை கட்சி)
1977 டி.பி.எம்.பெரியசாமி (அ.தி.மு.க)
1980 எம்.ஜி.ஆர் (அ.தி.மு.க)
1984 பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க)
1989 பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க)
1991 எஸ்.வி. சண்முகம் (காங்)
1996 பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க)
2001 வளர்மதி ஜெபராஜ்(அ.தி.மு.க)
2006 எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க)
2011 செல்லூர் ராஜூ (அ.தி.மு.க)
2016 செல்லூர் ராஜூ (அ.தி.மு.க)

2016 தேர்தல்

செல்லூர் ராஜூ (அ.தி.மு.க வெற்றி)- 82,529
கோ. தளபதி (தி.மு.க)- 66,131
வாசுகி (சி.பி.எம்)- 19,991
சசிகுமார் (பா.ஜனதா)- 5,705
திருநாவுக்கரசு (நாம் தமிழர் கட்சி)- 3,454
கிருஷ்ணகுமார் (பா.ம.க)- 927
பாண்டி (சிவசேனா)- 239

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வெற்றிபெற்ற பெருமைக்கு உரிய தொகுதி. இங்கு அவர் கடந்த 1980-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். மதுரை மேற்கில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அரசியலில் உச்சத்திற்கு செல்லலாம் என்ற ராசி, இந்த தொகுதிக்கு உண்டு.

பொன்.முத்துராமலிங்கம், வளர்மதி ஜெபராஜை அமைச்சராக்கி அழகு பார்த்த தொகுதி. பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனை சபாநாயகராக தேர்வு செய்த தொகுதியும் இதுவே.

மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூ கடந்த 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆனார்.

மதுரை மாநகராட்சியில் 60 முதல் 72 வரையிலான 13 வார்டுகள், மதுரையை மேற்கு தொகுதியில் அடங்கி உள்ளன. இதில் கோவில் பாப்பாகுடி, பரவை, விளாங்குடி, கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், துவரிமான், அச்சம்பத்து, காளவாசல், பழங்காநத்தம், ஜெய்ஹிந்துபுரம் ஆகியவை முக்கிய பகுதிகள் ஆகும்.


செல்லூர் ராஜூ, சின்னம்மாள்

மதுரை மேற்கு தொகுதியில் 2,80,428 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1,41,045 பேர் பெண்கள். 1,39,383 பேர் ஆண்கள். 32 பேர் திருநங்கைகள்.

மதுரை மேற்கு தொகுதியில் முக்குலத்தோர், பிள்ளைமார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக செட்டியார், யாதவர், ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் பல்வேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் முக்குலத்தோர் 30 சதவீதம் பேரும், பிள்ளைமார் சமூகத்தினர் 15 சதவீதம் பேரும் உள்ளனர்.
இவர்கள் தான் அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த 1967-ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதி முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்தித்தது. ஆக மொத்தத்தில் இதுவரை அங்கு 12 தடவைகள் சட்டசபை தேர்தல்கள் நடந்து உள்ளன.
இதில் அ.தி.மு.க 6 முறையும், தி.மு.க 3 முறையும், கம்யூனிஸ்டு 2 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளன.

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ 3-வது முறையாக களம் இறங்குகிறார். அவர் தொகுதிக்கு செய்த திட்டங்கள், அரசின் சாதனைகள் போன்றவற்றை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

தி.மு.க. சார்பில் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த சின்னம்மாள் களம் இறக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு எதிராக பெண் வேட்பாளரை களம் இறக்கி இருப்பதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமையாக கூறி வாக்கு சேகரித்தார். 
அ.ம.மு.க. சார்பில் முதலில் மாவூத்து வேலவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தொகுதி பின்னர் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சார்பில் பாலச்சந்திரன் களம் இறங்குகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் முனியசாமி போட்டியிடுகிறார்.

மதுரை மேற்கு தொகுதியில் விவசாயம், கைத்தறி நெசவு, சிறு குறு வணிகம் ஆகியவை முக்கிய தொழில்கள் ஆகும். இவைதான் அங்கு வசிக்கும் மக்களுக்கு பொருளாதார சக்தியாக விளங்குகிறது. மதுரை மேற்கு தொகுதியில் குறிப்பிடத் தக்க அளவில் தொழிற்சாலைகள் இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது.

இந்த தொகுதியில் பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றி தரப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
Tags:    

Similar News