செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியாக உயர்வு

Published On 2021-10-12 03:53 GMT   |   Update On 2021-10-12 03:53 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் கர்நாடக அணைகளில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

ஒகேனக்கல்லில் நேற்று காலை 16 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலையில் 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 20 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.

ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 15 ஆயிரத்து 479 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 19 ஆயிரத்து 68 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டது. கால்வாயில் 650 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 81.47 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 82.92 அடியானது. இதனால் ஒரே நாளில் ஒன்றரை அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News