லைஃப்ஸ்டைல்
காதலில் தோற்றால் வாழ்க்கையில் மகிழ்ச்சி

காதலில் தோற்றால் வாழ்க்கையில் மகிழ்ச்சி

Published On 2021-08-10 07:34 GMT   |   Update On 2021-08-10 07:34 GMT
காதல் மட்டும் வாழ்க்கை இல்லை என்பது எனக்கு தெரியும். காதல் தோல்விக்காக உயிரை விடுவது, மனஅழுத்தத்திற்கு உள்ளாவது, வேதனையில் முடங்கிக்கிடப்பது எல்லாம் அறியாமை.
காதலில் ஏற்படும் வெற்றியும், தோல்வியும் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. காதலில் வெல்லும்போது அவன் குடும்ப கடமைகளையும், சமூக பொறுப்புகளையும் நிறைவேற்றுகிறான். காதலில் தோற்கும்போது அத்தகைய கடமைகளை மறப்பதோடு, தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் சிலர் முன்வந்து விடுகிறார்கள். ஒரு சிலரோ தன்னை புறக்கணித்த காதலியை (அல்லது காதலனை) பழிவாங்கவேண்டும் என்றும் துடிக்கிறார்கள்.

கல்வியும், நாகரிகமும் வளர்ந்து வரும் இந்த யுகத்தில் காதல் ஜோடிகள் முரட்டுத்தனமான முடிவுகள் எடுப்பதை கைவிட்டுவிடவேண்டும். காதலர்களின் பெரும்பாலான தற்கொலைகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை பழிவாங்கவே செய்துகொள்ளப்படுவதாக கூறப்படு கிறது. ஆனால் நிஜத்தில் தற்கொலை மூலம் யாரையும் பழிவாங்க முடியாது. உண்மையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் பெற்றோர்கள்தான் சொல்லமுடியாத வேதனைக்கும், பழி பாவத்திற்கும் உள்ளாகிறார்கள். தற்கொலை செய்துகொள்கிறவர்கள் தங்கள் பெற்றோருக்கு தாங்கமுடியாத தண்டனையை கொடுத்துவிடுகிறார்கள்.

ரவீந்தரும், ரக்‌ஷனாவும் ஒரே கல்லூரியில் படித்தார்கள். நட்பில் ஆரம்பித்து காதலர்களாக மாறினார்கள். அவர்களின் காதல் பயணம் தொடர்ந்துகொண்டிருக்க, திடீரென்று ரவீந்தரின் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டது. அவளை புறக்கணிக்கத் தொடங்கினான். அதோடு அவளை வெறுப்படைய செய்யும் விதத்தில் வேறு சில பெண்களோடு ஊர் சுற்றினான். எரிச்சலோடு அவள், அவனிடம் இதுபற்றி கேட்டபோது ‘இது என் சொந்த விஷயம். இதில் நீ தலையிடக்கூடாது’ என்று எச்சரிக்கும் விதத்தில் பேசினான். மனம் உடைந்த ரக்‌ஷனா, ‘அப்படியானால் நீ என்னை காதலித்தது பொய்யா?’ என்று கேட்டாள். ‘நீதான் என் வருங்கால மனைவி. அதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் நான் உன்னிடம் மட்டுமே பேசிக் கொண்டிருக்க முடியாது. நான் பல பெண்களோடு பேசுவேன். பழகுவேன். அதில் நீ தலையிடக்கூடாது’ என்றான்.

ரவீந்தரின் இந்த சித்தாந்தம் அவளுக்கு பிடிக்கவில்லை. சற்று யோசித்தவள் ‘இன்றோடு நம் காதலை முடித்துக்கொள்வோம்’ என்றாள். அவனும் சரி என்றான்.

அவள் ரவீந்தரை தீவிரமாக காதலித்தாள் என்பது அவளது தோழிகள் சிலருக்கு தெரியும். காதல் முறிந்துபோனதும் அவள், தப்பான முடிவு ஏதாவது எடுத்துவிடுவாளோ என்று அந்த தோழிகள் அஞ்சினார்கள். ஆனால் ரக்‌ஷனா தெளிவாக இருந்தாள்.

காதல் மட்டும் வாழ்க்கை இல்லை என்பது எனக்கு தெரியும். காதல் தோல்விக்காக உயிரை விடுவது, மனஅழுத்தத்திற்கு உள்ளாவது, வேதனையில் முடங்கிக்கிடப்பது எல்லாம் அறியாமை. அவனை நான் மனப்பூர்வமாகத்தான் காதலித்தேன். அவனும் என்னை காதலித்தான். என்னை அவனுக்கு ஒருவேளை பிடிக்காமல் போயிருக்கலாம். அதை எப்படி சொல்வது என்று தெரியாமல், மற்ற பெண்களோடு பழகுவது மூலம் எனக்கு அதை புரியவைத்தான். நானும் புரிந்து கொண்டேன். அவன் நமக்கு சரிப்படமாட்டான் என்பது புரிந்துவிட்டது. சுமுகமாக பிரிந்து விட்டோம். என் வேலையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன் வேலையை அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

காதலில் இருந்து விடுபட்டுவிட்டதற்காக நாங்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்ட விரும்ப வில்லை. அவன்தான் காரணம் என்று நான் ஒரு குறை சொன்னால், அவன் என்னைப் பற்றி ஒன்பது குறை சொல்வான். அதுவே தொடர்ந்தால் எங்கள் நட்பு வட்டத்தாலும், சமூகத்தாலும் நாங்கள் தூற்றப்படுவோம். அதனால் அவனை நான் குறை சொல்லவிரும்பவில்லை என்பதை என் தோழிகள் மூலம் அவனுக்கு கூறிவிட்டேன். அவனும் பதிலுக்கு நாகரிகமாக நடந்துகொள்வதாக உறுதி அளித்திருக்கிறான். காதல் தோல்வி எனக்கு பல பாடங்களை கற்றுத்தந்திருக்கின்றன’ என்று அவள் தெளிவாக தன் தோழிகளிடம் சொன்னாள்.

அவளது அந்த முடிவை பார்த்த ரவீந்தரே வியந்து போனான். அவர்கள் காதலில் தோல்வியடைந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் நட்பு ரீதியாக மட்டும் நலம் விசாரித்துக் கொள்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டு வெவ்வேறு வாழ்க்கைத் துணையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

“வாழ்க்கையில் காதல் வரும், போகும். காதல் என்பது மட்டும் வாழ்க்கையில்லை” என்ற அவர்களது யதார்த்த கருத்துக்கு அவர்களது நண்பர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
Tags:    

Similar News