செய்திகள்
இலங்கை கடற்கொள்ளையர்களிடம் வலைகளை பறிகொடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள்

நடுக்கடலில் மீனவர்களை மிரட்டி ரூ.3 லட்சம் வலைகளை பறித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

Published On 2021-09-18 07:52 GMT   |   Update On 2021-09-18 07:52 GMT
வேதாரண்யம் அருகே தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் இதுபோல் பொருட்களை பறித்து செல்வதால் தமிழக மீனவர்கள் அச்சமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீனவர் காலனியை சேர்ந்த அருட்செல்வன் என்பவருக்கு சொந்தமான படகில் ராமச்சந்திரன் (வயது 40), நல்லதம்பி (35), மரியதாஸ் (25), அருள்ராஜ் (24) ஆகிய 4 மீனவர்களும் மணியன்தீவு கடற்கரைக்கு கிழக்கே சுமார் 15 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவில் 5 படகில் இலங்கை நாட்டை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 10 பேர் அங்கு வந்தனர். திடீரென அவர்கள் தமிழக மீனவர்களின் படகுகளை சூழ்ந்து கொண்டனர். பின்னர் கத்தி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 மீனவர்களையும் மிரட்டி படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவி வாக்கிடாக்கி, 3 செல்போன், டார்ச்லைட், 4 சிக்னல்லைட், 3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ தடிச்சவலை, சீலா மீன் பிடிக்கும் வலை ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இன்று காலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இது குறித்து கடலோர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் பகுதியில் மீனவர்களை தாக்கி வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். தற்போதும் அதேப்போல் சம்பவம் நடந்துள்ளது.

தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் இதுபோல் பொருட்களை பறித்து செல்வதால் தமிழக மீனவர்கள் அச்சமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

உடனடியாக இலங்கை கடற்கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News