செய்திகள்
கோப்புபடம்

விலை உயர்வை தடுக்க பந்தல்முறை தக்காளி சாகுபடி - விவசாயிகள் முயற்சிக்க வேண்டுகோள்

Published On 2021-11-25 06:45 GMT   |   Update On 2021-11-25 06:45 GMT
இரு நாட்களாக, ஒரு பெட்டி ஆயிரம் முதல் ரூ.1,200 வரை விற்பனையானது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது.
குடிமங்கலம்:

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. சுற்றுப்பகுதிகளில் விளையும் தக்காளி உடுமலை நகராட்சி சந்தை மற்றும் புற நகர் பகுதியிலுள்ள தக்காளி மார்க்கெட்களில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தக்காளி செடிகள், காய்கள் அழுகி சாகுபடியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடி முறையில் நடவு செய்யப்பட்ட தக்காளி மட்டுமே தற்போது சந்தைகளுக்கு விற்பனைக்கு வருகிறது. 

உடுமலை நகராட்சி சந்தைக்கு 14 கிலோ கொண்ட பெட்டிகள் சராசரியாக 30 ஆயிரம் வரை வரத்து காணப்படும். மழை காரணமாக தக்காளி வரத்து சரிந்து சந்தையிலுள்ள 32 கமிஷன் கடைகளுக்கும் தலா 20 முதல் 100 பெட்டிகள் மட்டுமே வரத்து உள்ளது.

வரத்து குறைவு காரணமாக தினசரி தக்காளி ஏலம் பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்த வாரம், ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 20-ந்தேதி புதிய உச்சமாக ரூ.1,500க்கு விற்றது. தொடர்ந்து மழை ஓரளவு குறைந்ததோடு, வெளி மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வருகை ஓரளவு குறைந்ததால் விலை குறைய தொடங்கியது. 

இரு நாட்களாக, ஒரு பெட்டி ஆயிரம் முதல் ரூ.1,200 வரை விற்பனையானது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

நிலைப்பயிராக இருந்த தக்காளி செடிகள் அழுகிய நிலையில் தொடர் மழை காரணமாக புதிதாக நடவு செய்ய முடியாமலும் உள்ளது. கொடி முறையில் நடவு செய்த தக்காளி மட்டுமே தற்போது விற்பனைக்கு வருகிறது.

கடந்த 20-ந்தேதி, ஒரு பெட்டி ரூ.1,500 வரை விற்பனையான நிலையில் போதியளவு தக்காளியும் வரத்து இல்லாததால் கேரளா மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வரத்து குறைந்தது.

இதனால் ரூ.300 வரை குறைந்து அதிகப்பட்ச விலையாக ரூ.1,200 நிலவுகிறது. மழை குறைந்து தக்காளி நடவு செய்து வரத்து வந்தால் மட்டுமே சீரான விலை நிலவ வாய்ப்புள்ளது என்றனர்.

இந்தநிலையில் பந்தல் முறையில் தக்காளி பயிரிட்டால் பாதிப்புகளை குறைத்து விலை உயர்வை தடுக்க முடியும் என திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம் புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இவர் பந்தல் முறையில் காய்கறி சாகுபடி செய்வதில் கைதேர்ந்தவர். பலத்த மழையிலும் பயிர்கள் சேதம் அடையாத வகையில் பந்தல் முறையில் தக்காளி பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பழனிசாமி கூறியதாவது:

பருவ மழைகளின்போது காய்கறிப் பயிர்கள் சேதமடைவது இயற்கை. இதிலிருந்து பயிர்களை பாதுகாக்க நாம் முயற்சித்தால் நஷ்டத்தில் இருந்து தப்பிவிடலாம். பெரும்பாலான விவசாயிகள் சாதாரண முறையில் தக்காளி நடவு செய்கின்றனர்.

இதனால் மழையின்போது தக்காளிகள் அழுகி வீணாகி விடுகின்றன. அவ்வாறு ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே  தட்டுப்பாடு ஏற்பட்டு  தக்காளி இன்று கடும் விலை உயர்வை எட்டியுள்ளது. வரும் நாளில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நான் நீண்ட காலமாக பந்தல் முறையில் தக்காளி சாகுபடி செய்து வருகிறேன். இதனால் பூ, காய், பழம் என எதுவும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இல்லை. ஏக்கருக்கு 12, 15 டன் வரை கிடைக்கும். இம்முறையில், ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் நட முடியும்.

பந்தல் அமைக்க ஏக்கருக்கு ரூ. 25ஆயிரம் முதல் ரூ.40ஆயிரம் வரை கூடுதல் செலவாகும். செலவைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் பந்தல் அமைக்க முன் வருவதில்லை. இதனால் காய்கள் அழுகி நஷ்டத்தை சந்திக்கின்றன. 

பந்தல் முறையில் தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் முயற்சிக்க வேண்டும். தமிழக அரசு இதற்கு மானியம் வழங்கி தக்காளி சாகுபடியை ஊக்குவித்தால் விலை குறைவதுடன் பொதுமக்களுக்கும் குறைந்த விலைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News