லைஃப்ஸ்டைல்
நீங்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருக்கிறீர்களா?

நீங்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருக்கிறீர்களா?

Published On 2021-03-25 04:28 GMT   |   Update On 2021-03-25 04:28 GMT
நீங்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருக்கிறீர்களா? இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றினால் நீங்கள் பலவீனமாக கருதும் ஷாப்பிங் பிரச்சனையிலிருந்து மீண்டு விடுதலை பெறலாம்.
இனி ஆடை வாங்க பணத்தை செலவழிப்பதில் சிக்கனமாக இருக்கபோகிறேன் என்று முடிவெடுத்த பிறகும், ஓர் அழகான ஆடையை பார்த்தும் உங்கள் மனம் அலைபாய்கிறதா? அதுவும் அந்த ஆடை தள்ளுபடி விலையில் கிடைத்தால் மனம் பட்டாம்பூச்சி போல படபடக்கிறதா? நீங்கள் என்றோ வாங்கிய கம்மலுக்கு மிகப்பொருத்தமாக இருக்கும், என்று உங்களுக்குள் ஒரு குரல் ஒலிக்கிறதா? கடைசியில் அந்த ஆடையை வாங்கிவிடுகிறீர்களா?

இப்படி வீணாக ஆடைகளை வாங்கி, மலை போல் குவித்து வைக்கும் பலவீனத்தை கட்டுப்படுத்த முடியாத உங்களின் வேதனையும் தவிப்பும் புரிகிறது. இதற்காக வருத்தப்படுவதை முதலில் நிறுத்துங்கள். பெண்களுக்கு ஆடைகள் மீதான ஆசையை கட்டுப்படுத்துவது எளிதல்ல.

நீங்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருக்கிறீர்களா? என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவை..

* நீங்கள் மிகுந்த ஆசையுடன் வாங்கிய பொருட்களை உங்கள் மேல் அக்கறை கொண்டவர்களிடம் இருந்து மறைப்பது.

*உங்களுக்கு தேவைப்படாத வாங்கத் திட்டமிடாத பொருட்களை வாங்குவது

* தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காகவே தற்போதைக்கு தேவையில்லாத பொருட்களை வாங்குவது

* வீடு திரும்பியதும் எதற்காக இந்த பொருளை வாங்கினோம் என்கிற வருத்தமோ குற்றஉணர்ச்சியோ உங்களுக்குள் ஏற்படுவது.

* கோபம், சோகம் போன்ற உணர்ச்சி மிகும் சமயத்தில் பொருட்களை வாங்கி குவிப்பது.

இந்த அறிகுறியெல்லாம் உங்களுக்கு இருந்தால் நீங்களும் ஷாப்பிங்கிற்கு அடிமையாகி விட்டீர்கள் என்று அர்த்தம்.

கவலை வேண்டாம் சில எளிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் இதிலிருந்து முழுமையாக மீளலாம்.

1. உங்கள் கைபேசியில் இருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள்.

2, உங்கள் அலமாரியில் உள்ள ஆடைகளில் எது தேவை, எது தேவையில்லை என்பதை முடிவு செய்து உபயோகிக்க ஏற்ற வகையில் அடுக்கி வையுங்கள். இதன் மூலம் ஏற்கனவே ஆடை வாங்கியதை மறந்து மீண்டும் ஆடை வாங்கும் பழக்கத்தை இது குறைக்கும். அலமாரியில் உள்ள ஆடைகளை எல்லாம் நீங்கள் மீண்டும் உபயோகிக்க தொடங்குவீர்கள். உங்களுக்கான புதிய ஆடைகளின் தேவையை இது குறைக்கும்.

3. ஷாப்பிங் செல்லும் முன் உங்களுக்கான பட்ஜெட்டை தெளிவாக திட்டமிடுங்கள். இந்த பட்ஜெட்டிற்கு மேல் செலவு செய்யப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் ஷாப்பிங் சென்று அதற்குள் உங்கள் தேவைகளை வாங்குங்கள்.

4. தேவைப்படும் ஆடைகளை மட்டும் வாங்குங்கள். எதிர்காலத்தில் என்றோ ஒருநாள் பயன்படும் என்று முன்னதாகவே ஆடைகளை வாங்கி வைக்காதீர்கள்.

இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றினால் நீங்கள் பலவீனமாக கருதும் ஷாப்பிங் பிரச்சனையிலிருந்து மீண்டு நீங்கள் விடுதலை பெறலாம்.
Tags:    

Similar News