செய்திகள்
வடகொரிய அதிபர்

கடும் உணவு பஞ்சம்- 2 நாளைக்கு ஒரு தடவை சாப்பிடும் வடகொரிய மக்கள்

Published On 2021-06-17 09:53 GMT   |   Update On 2021-06-17 09:53 GMT
வடகொரியா மக்கள் அரிசி, மக்காசோளம் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுபவர்கள். அதில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பாங்யாங்:

இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதே வெளி உலகத்துக்கு தெரியாது.

ஆனால் தற்போது பல லட்சம் மக்கள் பட்டினி கிடக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவியதால் வடகொரியாவுக்கு நோய் தொற்று வந்து விடக்கூடாது என்பதற்காக அதிபர் கிங்ஜாங்உன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

வடகொரியாவுக்கு சீனாவில் இருந்துதான் பல்வேறு உதவிப்பொருட்கள் வந்து கொண்டு இருந்தன. அவற்றுக்கும் தடை விதித்தார்.

இதன் காரணமாக பொருட்கள் வருவது தடைப்பட்டது. குறிப்பாக விவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விவசாய கருவிகள் போன்றவையும் வரவில்லை. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் புயல் காரணமாகவும் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் போதிய உணவு பொருட்கள் கிடைக்கவில்லை.

வடகொரியா மக்கள் அரிசி, மக்காசோளம் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுபவர்கள். அதில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மற்ற உணவு பொருட்களும் போதுமானதாக இல்லை.

இதனால் 15 லட்சம் டன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் விலைவாசியும் கடுமையாக உயர்ந்து விட்டது. 1 கிலோ வாழைப்பழம் ரூ.3,500-க்கு விற்கிறது. இவற்றை வாங்கி சாப்பிட பணம் இல்லாமல் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்.

பல லட்சம் பேர் பட்டினி கிடப்பதாகவும் அவர்களில் பலர் 2 நாட்களுக்கு ஒருதடவை சாப்பிடுவதாகவும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அதிபர் கிங்ஜாங் உன்னும் ஒப்புக்கொண்டுள்ளார். 1990-ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தில் 30 லட்சம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News