செய்திகள்
காசோலையை மருத்துவமனை நிர்வாகியிடம் ஐகோர்ட்டு நீதிபதி என் கிருபாகரன் வழங்கியபோது எடுத்த படம்

டி.வி. சீரியல்களால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது - ஐகோர்ட்டு நீதிபதி வேதனை

Published On 2019-10-14 03:34 GMT   |   Update On 2019-10-14 03:34 GMT
டி.வி. சீரியல்களால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதாக சென்னையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கூறினார்.
சென்னை:

சென்னை மாகாணத்தின் செரீப்பாக இருந்த ராஜா சர் ராமசாமி முதலியார், சென்னையில் பல்வேறு இடங்களில் சத்திரங்களை தொடங்கினார். இதைத்தொடர்ந்து ராமசாமி முதலியார் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனைகள், பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லம், மனநலம் குன்றியோர் காப்பகம் போன்றவை தொடங்கப்பட்டது.

தமிழக அரசின் சொத்தாட்சியர் அலுவலகம் இவற்றை நிர்வகித்து வருகிறது. ராமசாமி முதலியாரின் 179-வது பிறந்த நாள் விழா தமிழக அரசின் சொத்தாட்சியர் அலுவலகத்தின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிகார் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.



தமிழக அரசின் சொத்தாட்சியர் முருகன் வரவேற்றார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராமசாமி முதலியார் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு ஆதரவற்றோர் இல்லம், மனநலம் குன்றியோர் காப்பகம் மற்றும் ராமசாமி முதலியார் அறக்கட்டளை மருத்துவமனை ஆகியவற்றுக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அவர் கூறியதாவது:-

தற்போது பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் தங்களது குடும்பம் மேம்பட வேண்டும் என்று எண்ணி செயல்படுகின்றனர். ஆனால், ராமசாமி முதலியார் பொதுவாழ்க்கையின் மூலம் தான் சம்பாதித்ததை ஏழை மக்களுக்காக அர்ப்பணித்தவர். இதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. தற்போதுள்ள அரசியல்வாதிகள் ராமசாமி முதலியாரை முன்னோடியாக நினைத்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் மனம் பாழ்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். மக்களின் மனமும் பாழ்பட்டு விட்டது. 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களில் பலர் மரத்தடியில் படுத்து தூங்குகிறார்கள். இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளுக்கு இவர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பங்கு போய் சேருகிறது. அரசியல்வாதிகளும் இதில் பங்கு போட்டு கொள்கிறார்கள்.

போலீஸ்காரர்களில் பலர் நல்லவர்களாக உள்ளனர். பலர் பணத்தை வாங்கி கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளனர். இவர்கள் தங்கள் போக்கை மாற்றி கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், மக்கள் அனைவரும் திருந்த வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு தவறான செயலும் நமது சந்ததியினரை பாதிக்கும் என்பதை நினைத்து செயல்பட வேண்டும்.

பெண்களால் மட்டுமே ஒரு குடும்பத்தை மிக சிறந்த, ஒழுக்கமான குடும்பமாக உருவாக்க முடியும். எப்படி தங்களது தாய், தந்தையரை மதிக்கிறோமோ அதேபோன்று மாமனார், மாமியாரை மருமகள்கள் மதிக்க வேண்டும். டி.வி. சீரியல்கள் மூலம் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. எதிர்மறை சிந்தனை இருந்தால் எதிர்மறையான விளைவுகள் தான் நடக்கும். நல்லது நினைத்தால், நம்மை சுற்றி நல்லவர்கள் இருந்தால் நன்மைகள் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மெட்ராஸ் பார் அசோசியேசன்(எம்.பி.ஏ.) செயலாளர் பாஸ்கர், பாலவிகார் பள்ளி செயலாளர் சுசீலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ராமசாமி முதலியார் அறக்கட்டளை இணை அறங்காவலர் ராம்பிரசாத் நன்றி கூறினார்.

Tags:    

Similar News