இந்தியா
அலங்கார ஊர்தி

அலட்சியப்படுத்திய நிபுணர் குழு- அலங்கார ஊர்தி அனுமதி மறுப்பு பின்னணியில் பரபரப்பு தகவல்கள்

Published On 2022-01-18 06:42 GMT   |   Update On 2022-01-18 06:42 GMT
அலங்கார ஊர்திகளை தேர்வு செய்வதற்கான நிபுணர் குழு தமிழக ஊர்தியை தேர்வு செய்யும் வி‌ஷயத்தில் சற்று அலட்சியத்துடன் நடந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்படும்போது டெல்லி ராஜவீதியில் பிரமாண்டமான அணிவகுப்பு நடைபெறும்.

அந்த அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்லும். மாநிலங்களின் பெருமையை கலாச்சார பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அந்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு அமையும்.

இந்த ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்காக 36 மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு நிபுணர்கள் குழு கருத்து கேட்டது. பல்வேறு சுற்றுகளாக ஆய்வுகளும் நடத்தப்பட்டன. அதன் பிறகு 12 மாநிலங்களுக்கு மட்டும் குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்தியை அனுமதிக்க நிபுணர் குழு முடிவு செய்தது.

அலங்கார ஊர்திகள் தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடம் இருந்து மொத்தம் 56 பரிந்துரைகள் நிபுணர் குழுவுக்கு சென்றன. அதில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

தென் இந்தியாவில் இருந்து கர்நாடக மாநில அலங்கார ஊர்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு சார்பில் 7 மாதிரிகளில் அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டு நிபுணர் குழுவிடம் காட்டப்பட்டது. முதல்முறை காட்டப்பட்டபோது நிபுணர் குழு உறுப்பினர்கள் தமிழக அலங்கார ஊர்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு 3 முறை திருத்தம் செய்ய வலியுறுத்தினார்கள்.

அதன்படி தமிழக அலங்கார ஊர்தியில் பல்வேறு திருத்தங்களை தமிழக அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர். என்றாலும் மத்திய நிபுணர் குழுவினர் அதை ஏற்கவில்லை. 4-வது முறையாக ஆய்வுக்கு தமிழக அலங்கார ஊர்தியை அவர்கள் பரிசீலிக்கவில்லை.

இதையடுத்து தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்துக்கு அனுமதி கிடைக்காதது தமிழக மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும், மத்திய நிபுணர் குழுவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘‘ஊர்தியின் கருப்பொருள், மையக்கருத்து, வடிவமைப்பு, காட்சித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த ஊர்திகளை நிபுணர் குழுவினர் தேர்வு செய்கின்றனர். நிகழ்ச்சியின் நேரத்தை கருத்தில் கொண்டு குறைவான அளவிலேயே ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த நடைமுறையைத்தான் நிபுணர் குழு கடைபிடித்து வருகிறது.

இந்த முடிவை வைத்து மாநில முதல்வர்கள் மத்திய அரசை குற்றம்சாட்டுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். 2018, 2021-ல் கேரள ஊர்தியும், 2016, 2017, 2019, 2021-ல் தமிழ்நாடு ஊர்தியும், 2016, 2017, 2019, 2021-ல் மேற்கு வங்க ஊர்தியும் முந்தைய வழிமுறைகளைப் பின்பற்றியே தேர்வு செய்யப்பட்டன’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அலங்கார ஊர்திகளை தேர்வு செய்வதற்கான நிபுணர் குழு தமிழக ஊர்தியை தேர்வு செய்யும் வி‌ஷயத்தில் சற்று அலட்சியத்துடன் நடந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழக அலங்கார ஊர்தியில் பாரதியார், வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரது படங்களை தமிழக அதிகாரிகள் இடம் பெற செய்து இருந்தனர்.

இதை மத்திய நிபுணர் குழு ஏற்கவில்லை. தேசிய அளவில் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை இடம்பெற செய்யுங்கள் என்று நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்.

தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை அலங்கார ஊர்தியின் முன் பகுதியில் இடம்பெற செய்து இருந்தனர். முதலில் அதை ஏற்றுக்கொண்ட நிபுணர் குழு, பின்னர் சந்தேகங்களை எழுப்பியது.

மத்திய நிபுணர் குழுவினருக்கு தமிழகத்தில் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட தியாகிகளான பாரதியார், வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் பற்றி சுத்தமாக தெரியவில்லை. வ.உ.சிதம்பரனார் படத்தை காண்பித்து, ‘‘இவர் கப்பல் வியாபாரி தானே?’’ என்று அலட்சியமாக கூறி இருக்கிறார்கள்.

மேலும் நிபுணர் குழுவில் உள்ள ஒருவர், ‘‘இவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?’’ என்று கேட்டு இருக்கிறார்.

வேலு நாச்சியார் படத்தை காண்பித்து, ‘‘இவரை ஜான்சி ராணி போல ஏன் உருவகப்படுத்தி இருக்கிறீர்கள்’’ என்றும் நிபுணர் குழு அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதை கேட்டதும் தமிழக அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்துள்ளது.

நிபுணர் குழுவுக்கு தமிழகத்தின் பாரம்பரிய சிறப்பு தெரியவில்லை என்பதையே இது காட்டுவதாக அதிருப்தி அடைந்துள்ளது. ஆனால் இதை மத்திய நிபுணர் குழுவினரும், பா.ஜனதா மூத்த தலைவர்களும் மறுத்துள்ளனர்.



தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், ‘‘எதிர்க்கட்சியினர் அலங்கார ஊர்தி விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அலங்கார ஊர்தியை 10 கட்ட ஆய்வுக்கு பிறகே தேர்வு செய்துள்ளனர். தமிழகத்துக்கு 3 தடவை தொடர்ச்சியாக முன்பு வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லா மாநிலங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’’ என்று கூறி உள்ளார்.

தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது. இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வட மாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது.

ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News