ஆன்மிகம்
கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம்

கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம்

Published On 2021-03-01 01:56 GMT   |   Update On 2021-03-01 01:56 GMT
திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசி திருவிழா கடந்த மாதம் 11-ந் தேதி பூத்த மலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பூச்சொரிதல் விழா, பூக்குழி இறங்குதல், தேரோட்டம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன.

ஒவ்வொரு ஆண்டும் திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு பொட்டு கட்டுதல் செய்து மாசித் திருவிழாவை தொடங்கி வைப்பதும், அதனை தொடர்ந்து மஞ்சள் நீராடி திருவிழாவை நிறைவு செய்வதும் வழக்கம். அதன்படி மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதனை சபா தலைவர் ஏ.கந்தசாமி ஆச்சாரி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது.

அங்கு, அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்யப்பட்டது. இதையொட்டி அனைவரின் மீதும் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு அம்மன் வீதிஉலா தொடங்கியது.

இதில் பக்தர்கள் அனைவரும் மஞ்சள் நீராடி ரதவீதிகள் வழியே வலம் வந்து அம்மனை சபா மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு மஞ்சள் நீராடி அழைத்து வந்தவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பிறகு மாலை 6 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன.

அதனைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் அம்மனின் மின்னொளி தேர் வீதி உலா தொடங்கியது. இதில் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் தாரை, தப்பட்டை, கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல் விஸ்வகர்ம இளைஞர் சபா சார்பில் அக்கசாலை விநாயகர் மின்னொளி தேர் முன்செல்ல அடுத்ததாக விஸ்வ பிரம்ம மின்னொளி தேரும், அதற்கு அடுத்ததாக கோட்டை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மின்னொளி தேரும் ரத வீதிகள் வழியே பவனி வந்து கோவிலை அடைந்தது.

இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியளவில் கொடியிறக்கம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News