செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

வாக்காளருக்கு பணம் கொடுத்தே கனிமொழி வெற்றிபெற்றார்- கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

Published On 2019-10-03 10:15 GMT   |   Update On 2019-10-03 10:39 GMT
ஒவ்வொரு வாக்காளருக்கும் பணம் கொடுத்தே தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். அந்த மாநாடு மூலம் பல முதலீடுகளை ஈர்த்த பெருமை ஜெயலலிதாவையே சாரும். அதே வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தினார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து சுமார் ரூ. 5 ஆயிரத்து 750 கோடி முதலீட்டில் 30 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழில்கள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதனை பார்த்து காழ்ப்புணர்ச்சி காரணமாக கனிமொழி எம்.பி., தி.மு.க. ஆட்சியில் தான் தொழில் வளம் பெருகியதாக கூறி இருக்கலாம். அதைப்பற்றி கவலை இல்லை. தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு தொழில் வளம் பெருகியது, என்ன முயற்சி செய்தார்கள்? என்பது மக்களுக்கு தெரியும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தான் அ.தி.மு.க.வினர் தேர்தலை சந்திப்பதாக கனிமொழி எம்.பி. கூறி உள்ளார். அப்படி பணம் கொடுத்து பழகியவர்கள், அவர்களின் கருத்தை கூறுகிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடந்தது, யார் பணம் கொடுத்தார்கள்? என்பது தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு தெரியும்.

பணம் கொடுத்து வெற்றி பெறவில்லை என்று கனிமொழி எம்.பி. சொல்ல தயாரா?. ஒவ்வொரு வாக்காளருக்கும் பணம் கொடுத்து பெற்ற வெற்றி தான் கனிமொழியின் வெற்றி. அவர் மற்றவர்களை பற்றி சொல்வது பொருத்தமாக இருக்காது.

இந்தியாவுக்கே வழி காட்டியாக நதிகள் இணைப்பை செயல்படுத்திய பெருமை முதல்-அமைச்சரையே சாரும். 3-வது கட்டமாக ரூ. 800 கோடி செலவில் கருமேனியாறு, தாமிரபரணி ஆறு, நம்பியாறு இணைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. 4-வது கட்ட பணிகள் முடிவடையும் போது, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை ஜெயலலிதா அரசு தான் செயல்படுத்தி வருகிறது.


அத்திக்கடவு-அவிநாசி திட்டம் கொண்டு வருகிறோம். இதுபோன்ற ஒரு திட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினோ, கனிமொழியோ கூற முடியுமா?. இது போன்ற திட்டங்கள் கொண்டு வருவதை பார்த்து காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லி வருகிறார்கள்.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு சிறப்பான வெற்றி வாய்ப்பு உள்ளது. அந்த தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News