செய்திகள்
முட்டை

சேலம் அருகே அரசு பள்ளிகளில் புகுந்து முட்டைகள் திருடும் கும்பல்

Published On 2021-10-20 04:33 GMT   |   Update On 2021-10-20 04:33 GMT
சேலம் அருகே அரசு பள்ளிகளில் புகுந்து முட்டைகளை திருடும் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,100 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு மாணவிகள் விடுதி மற்றும் வட்டார வள மையம் செயல்படுகிறது. இங்குள்ள சத்துணவு கூட கட்டிடம் சேதமானதால், முட்டைகள், அரிசி மூட்டைகள், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஒரு வகுப்பறையில் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் பள்ளி வடக்கு பகுதியில் 10 அடி நீளம் சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. அதன் வழியே இரவு நேரத்தில் மர்ம நபர்கள் பள்ளிக்குள் நுழைந்து, வகுப்பறையில் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்ட முட்டைகள், பருப்பு உள்ளிட்டவைகளை அள்ளிச் சென்றனர். இதேபோல் நேற்று முன்தினம் சத்துணவுக்கு 4000 முட்டைகள் கொண்டு வரப்பட்டு வகுப்பறையில் வைக்கப்பட்டு இருந்தது.

இதை நோட்டமிட்ட மர்மகும்பல் நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த முட்டைகளை அடித்தும், உடைத்தும் சேதப்படுத்தியது. மேலும் முட்டைகளை அள்ளிச் சென்றனர். இதேபோல் மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாதிரிப்பள்ளியில் மர்மநபர்கள் புகுந்து திருட்டில் ஈடுபட்டனர்.

இது குறித்து பெற்றோர், ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மல்லூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார், பள்ளியில் பார்வையிட்டு, முட்டைகளை திருடி சென்ற மர்ம கும்பல் பற்றி விசாரித்து வருகிறார்கள்.

தொடர்ந்து அரசு பள்ளிகளை குறி வைத்து திருடும் மர்ம கும்பலை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News